விஜய்யின் GOAT.. செம நஷ்டம் வந்துவிட்டதா?.. என்ன வேற மாதிரி பேச்சு கேட்குது
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நாட்கள் செல்ல செல்ல பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம் வசூல் ரீதியாக படம் நல்ல கலெக்ஷன் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் GOAT படத்தால் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. வெங்கட்டின் படங்கள் என்றாலே ட்விஸ்ட்டுக்கும், கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதாலும், விஜய்யுடன் முதன்முறையாக அவர் கூட்டணி வைத்திருப்பதாலும் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. கடந்த 5ஆம் தேதி ரிலீஸான படத்துக்கு அதே எதிர்பார்ப்பு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். ப்ரீ புக்கிங்கிலேயே படத்தின் டிக்கெட் விற்பனை மாஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திரையரங்கில் திருவிழா: GOAT படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு சென்ற ரசிகர்கள் தியேட்டரை திருவிழா கோலம் பூண வைத்துவிட்டார்கள். பட்டாசு வெடித்து கட் அவுட்டுகளுக்கு ஏகப்பட்ட அபிஷேகங்கள் செய்து அதகளம் செய்தனர். எப்போதும் விஜய்யின் படம் என்றால் முதல் நாள் பண்டிகைதான் என்பதை GOAT படமும் நிரூபித்திருக்கிறது என்பதுதான் கள உண்மை.
பாசிட்டிவ் விமர்சனம்: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து எந்த மாதிரியான சம்பவம் செய்யப்போகிறார் என்ற ஆவலோடு படம் பார்க்க சென்ற தங்களுக்கு வெங்கட் செம ட்ரீட் கொடுத்திருக்கிறார் என விஜய் ரசிகர்கள் சொன்னார்கள். மேலும், ஆக்ஷன், காமெடி, செண்ட்டிமெண்ட் என அனைத்தையும் கலந்துகட்டி ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜை கொடுத்து தங்களை மகிழ்வித்துவிட்டார் என்றும் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதேசமயம் முதல் நாள் எப்போதும் ரசிகர்கள் அப்படித்தான் கூறுவார்கள் இரண்டு மற்றும் மூன்றாம் நாளில்தான் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியும் என்றும் ஒருதரப்பினர் கூறினார்கள்.
கலவையான விமர்சனம்: அதன்படிதான் நாட்கள் செல்ல செல்ல ரிசல்ட் வந்துகொண்டிருக்கிறது. அதாவது முதல் நாள் பாராட்டிய விஜய் ரசிகர்களை தவிர்த்து பொதுவான ரசிகர்கள் படம் மீதான தங்களது அதிருப்தியை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். பழைய காலத்து கதை,திரைக்கதையில் ஒன்றுமே இல்லை; படத்தின் நீளம் அநியாயத்துக்கு அதிகமாக இருக்கிறது; யுவனின் ரீ ரெக்கார்டிங்கும் சரியில்லை என்று ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
நஷ்டம்?: மேலும் லியோ படத்துக்கு இது பரவாயில்லை என்றும் சொல்லிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க படம் வெளியாகி இதுவரை 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் படம் சுத்தமாக படுத்துவிட்டதாக கூறுகிறார்கள். முக்கியமாக அங்கெல்லாம் 40 கோடி ரூபாய் வசூலித்தாலே வெற்றிதான் என்ற நிலை இருப்பதாகவும்; ஆனால் GOAT படமோ வெறும் 15 கோடி ரூபாயைத்தான் இதுவரை வசூலித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆக ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











