ஹேமா கமிட்டி அறிக்கை.. நிர்வாண ஃபோட்டோக்களை அனுப்பினாரா இயக்குநர் ரஞ்சித்?.. ரேவதி விளக்கம்
சென்னை: இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. மலையாள திரையுலகில் நடிகைகள் முதல் பெண் ஊழியர்கள்வரை நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன் காரணமாக கேரள திரையுலகில் பெரும் புயல் வீசிவருகிறது. முக்கியமாக இயக்குநர் ரஞ்சித் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் சிலர். அந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதேபோல் சுனி என்பவரும் சைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமா கமிஷன்: இந்த விவகாரத்தை அடுத்து மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது ; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தார்கள்.அதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.
அந்த கமிஷனில் ஹேமா தவிர்த்து நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரித்து தங்களது அறிக்கையை 2019ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் அந்த அறிக்கையில் என்னவிருந்தது என்பது வெளியிடப்படாமலேயே இருந்தது. அதற்கு காரணம் பலர் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நடந்த விஷயங்களை கூறியிருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் அந்த விஷயத்தை தவிர்த்து பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் உரிமை ஆணையம் தெரிவித்திருந்தது.
தள்ளுபடி செய்த நீதிமன்றம்: ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிடவேக்கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேரளாவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒருவரின் தனியுரிமையை பாதிக்காத வண்ணம் அறிக்கையை வெளியிடலாம் என்று தகவல் உரிமை ஆணையம் கூறியிருப்பதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேரளாவை சேர்ந்த 5 பேர் ஹேமா கமிஷன் அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு: முக்கியமாக இயக்குநர் ரஞ்சித் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ரஞ்சித் தன்னை இரவு முழுக்க நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததாக ஒரு இளைஞர்கூட சமீபத்தில் கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. மேலும் அந்த விஷயத்தில் நடிகை ரேவதியின் பெயரும் அடிபட்டது. இந்நிலையில் ரேவதி இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.
ரேவதியின் விளக்கம்: இவ்விவகாரம் குறித்து ரேவதி அளித்திருக்கும் விளக்கத்தில், "என்னையும் இயக்குநர் ரஞ்சித்தையும் இணைத்துவரும் செய்திகள் பற்றி நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அப்படி எந்தப் புகைப்படங்களையும் இயக்குநர் ரஞ்சித் எனக்கு அனுப்பி வைக்கவே இல்லை. இதுதொடர்பாக நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார். முன்னதாக இந்த விவகாரம் பூதாகரம் ஆனதை அடுத்து AMMA தலைவர் பதவியிலிருந்து நடிகர் மோகன் லால் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











