twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாமியா.. சிங்கமா? இணையத்தில் வைரலான சாமி 2 டிரெய்லர்!

    ஹரி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள சாமி 2 படத்தின் விமர்சனம்.

    |

    சென்னை: விக்ரமின் சாமி 2 பட டிரெய்லரை இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

    ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 15 ஆண்டுகள் கழித்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திலும் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ஹரியே இயக்கியிருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். படத்தில் திரிஷாவும் நடித்துள்ளார். தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் படத்தை தயாரித்துள்ளார்.

    சாமி படத்தின் முதல் பாகத்தில் திருநெல்வேலி மாநகரையே ஆட்டிப்படைக்கும் வில்லன் பெருமாள் பிச்சையை (கோட்டா சீனிவாச ராவ்), போலீஸ் துணை கமிஷனர் ஆறுச்சாமி (விக்ரம்) எப்படி அழிக்கிறார் என்பது கதை. இந்த படக்காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகரும். 'நான் போலீஸ் இல்ல பொறுக்கி', 'நான் பொறக்கும்போதே ஆறு பேர கொன்னுட்டு பிறந்தவன் டா' என்பன போன்றவை படத்தில் விக்ரம் பேசும் பஞ்ச் டயலாக்குகள்.

    Review of Saamy 2 trailer

    இந்நிலையில் சாமி படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயரின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. டிரெய்லர் வெளியான இரண்டே நாட்களில் அதனை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். கலவையான விமர்சனங்களைப் பெற்ற சாமி 2 டிரெய்லர் பற்றி நமது விமர்சனம்:

    வழக்கமான ஹரி படம் என்பதற்கு அதில் வரும் காட்சிகளே சொல்கின்றன. ஆனால், பார்ப்பவர்களுக்கு வரும் சின்ன குழப்பம், இது சாமி 2வா? இல்லை சிங்கம் நான்காம் பாகமா என்பது தான்.

    முதல்பாகத்தில் சாமியின் வேட்டை தொடரும் என முடித்திருப்பார் ஹரி. அதன்படி இரண்டாம் பாகம் நெல்லையிலேயே தொடரும் என நினைத்தால், நம் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இம்முறை சாமியின் வேட்டைகளம் டெல்லி தான் என, செங்கோட்டை, இந்தியாகேட் போன்றவைகளைக் காட்டி டிரெய்லரின் முதல் சில ஷாட்களிலேயே சொல்லி விடுகிறார் ஹரி.

    அடுத்த காட்சியில் அதிரடி ஆக்‌ஷனுடன், அனல் பறக்கும் கண்களுடன், கையில் துப்பாக்கி ஏந்தி அசர வைக்கும் எண்ட்ரி கொடுக்கிறார் விக்ரம். 15 வருடங்களுக்குப் பிறகு வரும் இரண்டாம் பாகம் என்றபோதும், முதல் பாகத்தில் இருந்த வீராப்பும், உடல்கட்டும் வித்தியாசப்பட்டு விடாமல் அதே கெத்து காட்டியிருக்கிறார் சீயான்.

    ஹீரோவைக் காட்டிவிட்டால், அடுத்து வில்லன் தானே. படுத்தபடியே போஸ் கொடுக்கிறார் பாபி சிம்ஹா. அவரது சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொஞ்சம் ஜிகிர்தண்டாவை ஞாபகப் படுத்துகிறது. இதை கொஞ்சம் மாற்றி, கெட்டப்ப்பில் வேறு லுக் கொண்டு வந்திருந்தால் பெருமாள் பிச்சை மகன், படத்தில் இன்னும் கொஞ்சம் எடுப்பாக இருந்திருப்பார் எனச் சொல்லத் தோன்றுகிறது.

    அடுத்து ஒரு கல்யாணக் காட்சி. படத்தில் அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? அது யாருடையது எனத் தெரியவில்லை. ஆனால் வட இந்தியாவில் நடக்கும் திருமணம் என்பது வந்துள்ள உறவினர்களின் ஆடை மூலம் தெரிகிறது. ஆனால், இந்தக் காட்சியில் ஆக்ரோசமாக மந்திரம் சொன்னபடி நடந்து வருகிறார் விக்ரம். சாமி முதல் பாகத்தில் அப்பா விக்ரம், மாமியைக் கரம் பிடித்ததால், இவர் மந்திரம் சொல்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஹீரோ, வில்லன்.. ஓகே! அடுத்தது யாரு நம்ம நாயகி கீர்த்தி சுரேஷ் தான். வழக்கமாக ஹரியின் படங்களில் நாயகிகள் ரொம்பவும் மாடர்னாக இருக்க மாட்டார்கள். பாவாடை தாவணி கட்டி தான் வளைய வருவார்கள். ஆனால், இதில் முதல் ஷாட்டிலேயே மாடர்ன் மங்கையாக அறிமுகமாகிறார் கீர்த்தி. அடுத்து வழக்கம்போல் வில்லன் குரூப்பிடம் இருந்து கீர்த்தியைக் காப்பாற்றும் விக்ரம், முதல் கார், அப்புறம் ஹெலிகாப்டர் என ஏற்றி விட்டு, 'பை பை' சொல்கிறார்.

    காதல்னு இருந்தா, அதில் ஊடல் இல்லாமலா? பூங்காவில் நாயகி தனியாக அமர்ந்திருக்கிறார், தாஜ்மஹாலின் முன் நாயகன் சோகமாக இருக்கிறார். இது நிச்சயம் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை வரும் போது உள்ள காட்சிகள் போல. ஒரு வேளை சோகப் பாடல் காட்சியாகக்கூட இருக்கலாம். கீர்த்தி யாரையோ பார்த்து எக்ஸ்க்யூஸ்மீ என்கிறார். ஆனால், ஆடியோவிற்கு பதில் பின்னணி இசை ஒளிக்கிறது.

    அடுத்து காமெடிக்கு சூரி. முதல் பாகத்தில் திருநெல்வேலியில் விவேக் அதகளப் படுத்தினார் என்றால், இதில் சூரி டெல்லியைப் பாடாய் படுத்துவார் போல. ஆனால், சூரியின் காட்சிகள் எதிர்பார்ப்பை கூட்டவில்லை.

    அடுத்து ஹரி படத்தில் வழக்கமாக இடம்பெறும் வாகனங்களைத் துரத்துதல், துப்பாக்கிச் சூடு காட்சிகள், ஹீரோயினை அடிக்கும் ஹீரோ, கையை ஓங்கி தன் கெத்தை நாயகன் காட்டுவது என எதுவும் இந்த டிரெய்லரிலும் மிஸ் ஆகவில்லை. கப்பலைத் தவிர கார், ரயில், ஹெலிகாப்டர் என இரண்டு நிமிட டிரெய்லரில் எல்லாமே வந்து விடுகிறது.

    டிரெய்லரில் வரும் பல காட்சிகள் சிங்கம் உள்பட ஹரியின் முந்தையப் படங்களையே ஞாபகப் படுத்தி சலிப்பூட்டுகிறது. இப்படி டிரெய்லரிலேயே ரிப்பீட் காட்சிகளை வைத்தால், எப்படி நம்பி தியேட்டருக்கு வருவார்கள் ஹரி? இதில் கூடுதல் சிஜி (computer graphics) எபெக்ட்ஸ் எல்லாம் கொடுத்து, சிங்கத்தினையே திரும்பவும் ஞாபகப் படுத்துகிறார் இயக்குனர். இதன் காட்சிகளைப் பார்க்கும்போது, ஒருவேளை சிங்கம் நான்காம் பாகத்திற்கு தயார் செய்த காட்சிகளை டிங்கரிங் பார்த்து, விக்ரமை நடிக்க வைத்து சாமி 2 ஆக்கி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

    அப்படியெல்லாம் சந்தேகப்படக் கூடாது, இது சாமி 2 தான் என நிரூபிக்க, முதல் பாகத்தில் வில்லனாக வந்த பெருமாள்சாமி புகைப்படமாக ஒரு காட்சியில் தலைகீழாகக் தொங்குகிறார். மற்றொரு காட்சியில் முதல் பாகத்தில் திரிஷாவின் அப்பா, அம்மாவாக நடித்த டெல்லிகணேஷும், சுமித்ராவும் வந்து போகின்றனர். இரண்டாம் பாகத்தில் திரிஷா இருக்கிறார் என சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக, ஹரி சொல்லி இருந்த நிலையில், டிரெய்லரில் தப்பித்தவறி புகைப்படமாகக் கூட திரிஷாவைக் காட்டாதது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.

    முதல் பாகத்தில், 'நான் போலீஸ் அல்ல, பொறுக்கி'னு விக்ரமை சொல்ல வைத்த ஹரி, இப்போதும் அதைச் சொன்னால் எங்கே பிரச்சினையாகி விடுமோ என நினைத்து உஷாராக, 'நான் சாமி இல்ல பூதம்' என்கிறார். ஆனால், நீங்கள் மாண்புமிகு 'அவரை'த் தான் அப்படிச் சொல்கிறீர்கள் என மீம்ஸ்கள் உருவாகலாம் என்பதை மறந்து விட்டீர்களா?

    கடைசியாக விக்ரம் ரசிகர்களுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் இந்த டிரெய்லர் சொல்லும் கருத்து, 'யூனிபார்ம மட்டும் பார்த்துட்டு, மேலே முகத்தை சூர்யாவா பார்த்தீங்கன்னா அது சிங்கம்... அதே முகத்தை விக்ரமா பார்த்தீங்கன்னா அது சாமி' அவ்வளவு தான்.

    அய்யய்யோ சொல்ல மறந்துட்டேனே... இந்த டிரெய்லரைப் பார்க்கும்போது ஹரிக்கு நிச்சயம் சாமி 3ம் பாகம் அல்லது சாமி க்யூப் எடுக்கும் ஐடியா இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், சிங்கமும், சிங்கத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் இப்படித்தானே கதைக்களம் நகர்ந்தது. அந்தவகையில் நிச்சயம் சாமி 3 பாரீன் கதைக்களத்தில் உருவாகும் என நாமும் சூடம் அடித்து சத்தியம் செய்யலாம்.

    English summary
    The trailer of Saamy 2, directed by Hari, starring Vikram, Keerthi suresh, Trisha, Bobby simha in lead was released on June 3rd. The trailer has crossed five million views within two days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X