என்ன ஆச்சு? வேதனையைச் சொன்ன கீர்த்தி சுரேஷ்.. தலையிலேயே கொட்டும் கணவர்.. AK சொன்னதையும் சொல்றாங்களே!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படமான ரிவால்வர் ரீட்டா படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் தொடங்கி உள்ளது. படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஐ. குறித்து தனது வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், " தொழில்நுட்பம் என்பது நாம் கண்டுபிடித்ததுதான். அது இன்றைக்கு நம்மைக் கடந்து சென்று கொண்டுள்ளது. சமூக வலைதளங்களில் நான் பார்க்கும்போது, நான் இது போன்ற டிரஸ் போட்டேனா என்று நானே ஆச்சரியப்பட்டு பார்த்திருக்கிறேன். ஏ.ஐ. ஆல் உருவாக்கப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது. அண்மையில் நான் கலந்து கொண்ட படத்தின் பூஜையில் நான் அணிந்திருந்த ஆடைகளில் நான் வேறு மாதிரியான அதாவது தவறான கோணத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டதைப் பார்த்து நானே அதிர்ந்து போனேன்.

வருத்தம்: அதைப் பார்த்ததும் நான் இப்படி எல்லாம் போஸ் கொடுத்தேனா என்று எனக்குள்ளே சந்தேகம் வந்துவிட்டது. அதன் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன், அது நான் கொடுத்த போஸ் இல்லை என்று. ஏ.ஐ. ஆல் உருவாக்கப்படும் புகைப் படங்களைப் பார்க்கும்போது எரிச்சலாகத்தான் இருக்கிறது. இது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இப்படி எல்லாம் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்றே தெரியவில்லை.
தலையில் கொட்டும் கணவர்: இது சங்கடத்தைத் தான் கொடுக்கிறது. தொடர்ந்து இந்த பயம் பல வழிகளில் இருந்தது. தற்போது, ஏ.ஐ.ஆக மாறி நிற்கிறது. நானும் சமந்தாவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தேன், நிஜமாலுமே நாங்கள் இருவரும் போஸ் கொடுத்து நிற்பதைப் போல அது இருக்கிறது. எது உண்மை எது ஏ.ஐ. என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது கணவருக்கு ஷேர் செய்தால், அவர் உடனே சொல்லுவார், பார்த்தாலே தெரியவில்லையா இது ஏ.ஐ என்று எனக் கூறுவார். அதன் பின்னர் கமெண்ட் செக்ஷனைப் பார்த்தால் அதில் ஏ.ஐ. என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.

அஜித் சொல்லும் டயலாக்: எதை நம்புவது, எதை நம்ப வேண்டாம் என்று புரியவில்லை. இதனாலேயே இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பார்ப்பதில்லை. ஒரு மாதிரி விரக்தியாக தான் இருக்கிறது. மோசமாக கமெண்ட் செய்தவர்களைப் பார்த்து சொல்ல விரும்புவது ஒன்றுதான், வாழுங்கள், எங்களையும் வாழவிடுங்கள் என்றுதான் சொல்ல விரும்புகிறேன் " என்று பேசியுள்ளார். அவரது இந்த பேட்டி குறித்த பேச்சுக்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











