போதைப் பொருள் விவகாரம்.. சகோதரரை அடுத்து நடிகை ரியா சக்கரவர்த்தியும் அதிரடி கைது!
மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் சோவிக், சாமுவேல் மிராண்டா உள்பட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ரியாவும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ரியா சக்கரவர்த்தி
நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார்.

பணமோசடி
அதில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாட்னா போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது.

வாட்ஸ்அப் உரையாடல்கள்
இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்த போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சோவிக் சக்கரவர்த்தி
நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு இருவரையும் போதைப் பொருள் வழக்குக்காக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ரியா சக்கரவர்த்தி கைது
இந்நிலையில், நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் கடந்த சில நாட்களாக போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை இன்று கைது செய்தனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


Click it and Unblock the Notifications











