சுஷாந்த் வழக்கு.. நடிகை ரியா சக்கரவர்த்தி தலைமறைவு.. வலைவீசும் பீகார் போலீஸ்.. டிஜிபி அதிரடி!
பாட்னா: சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், போலீஸ் தேடுவதை அடுத்து நடிகை ரியா சக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டதாக பீகார் டிஜிபி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கு பரபரப்பாகி இருக்கிறது. இந்த வழக்கை முதலில் மும்பை போலீசார் விசாரிக்கத் தொடங்கினார்.
சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், சினிமா இயக்குனர்கள், அவருடன் பழகிய நடிகர், நடிகைகள் உள்பட 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி அதைப் பதிவு செய்துள்ளனர்.

ரியா சக்கரவர்த்தி
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சுஷாந்த் சிங் மறைந்து சரியாக ஒரு மாதம் கழித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், சுஷாந்த் பற்றி உருக்கமாகப் பதிவு செய்திருந்தார்.

சுஷாந்த் தந்தை
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா சக்கரவத்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், 'சுஷாந் சிங்கை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்குப் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாட்னா போலீசார்
இதையடுத்து ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாட்னா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த பீகார் போலீசார், பாட்னா காவல்துறை கண்காணிப்பாளர் வினய் திவாரி தலைமையில் மும்பை வந்துள்ளனர். அவர்கள், சுஷாந்த் வழக்கின் ஆவணங்களை மும்பை போலீசிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் ஒப்படைக்கவில்லை.

தடை விதிக்க மறுப்பு
பீகார் போலீசாருக்கு அவர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மேலும் பீகார் மாநிலம் பாட்னாவில் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி ரியா சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தலைமறைவு
அதோடு ரியாவைக் கைது செய்யத் தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. இதற்கிடையே, பாட்னாவில் பேசிய பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே, ரியா சக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். 'ரியா சக்கரவர்த்தி எங்களுடன் தொடர்பில் இல்லை. அவர் விசாரணைக்கு முன் வரவில்லை. அவர் தலைமறைவாக இருக்கிறார். மும்பை போலீசாருடன் கூட அவர் தொடர்பில் இருக்கிறாரா என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











