'இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்..' அமெரிக்காவில் திருமண நாளை கொண்டாடிய சிம்பு, தனுஷ் பட ஹீரோயின்!
போர்ட்லேண்ட்: இன்னும் அதிகமாகவே நேசிக்கிறேன் என்று தனது முதல் திருமண நாளில் கணவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் தனுஷ், சிம்பு பட ஹீரோயின்.
தனுஷ் நடித்த, மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், ரிச்சா கங்கோபத்யாய்.
தெலுங்கில் ராணா நடித்த லீடர் படம் மூலம் நடிகையான இவர், அதைத் தொடர்ந்து தமிழுக்கு வந்தார்.

சிம்புவின் ஒஸ்தி
மயக்கம் என்ன படத்தை அடுத்து, சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார். இந்தப் படத்தை தரணி இயக்கி இருந்தார். இது, இந்தியில் சல்மான்கான் நடித்து சூப்பர் ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக். இதில் நெடுவாலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார், ரிச்சா. படம் பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும் ரிச்சாவின் நடிப்பு பேசப்பட்டது.

காதல் திருமணம்
இதையடுத்து, மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்த ரிச்சா, நடிப்பதை திடீரென நிறுத்தி விட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார். அங்கு தன்னுடன் படித்த சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவரைக் காதலித்தார். இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் வசித்து வருகிறார், ரிச்சா.

அவசர நிலை
அவர் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகை ரிச்சா, இரு தினங்களுக்கு முன் ட்விட்டரில், 'இங்கு காற்றின் தரம் மோசமாகி விட்டது. புகை எங்கள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது. எல்லா பகுதியிலும் ஏர் பியூரிபையர்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. புகையால் ஏற்படும் தலைவலிக்கு எதிராக போராடி வருகிறோம்' என்று கூறியிருந்தார்.

திருமண நாள்
இந்நிலையில் அவர் தனது முதல் திருமண நாளை, கணவருடன் நேற்று கொண்டாடி இருக்கிறார். இதுபற்றி சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உன்னை சந்தித்த நொடியில் இருந்து கதைகளில் மட்டுமே இருக்கும் புதுவித மகிழ்ச்சியை கண்டேன் என்பது தெரியும்.

அதிர்ஷ்டசாலி மனைவி
ஒரு வருடத்துக்கு முன், இதே நாளில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட விழாவில் உறுதியெடுத்துக் கொண்டோம். நேற்று நடந்தது போல் இருக்கிறது. இந்த உலகில் நான் அதிர்ஷ்டசாலி மனைவி. இந்த ஒருவருட திருமண வாழ்க்கை, காதல் என்பது மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல என்பதை கற்றுத் தந்திருக்கிறது.

அதிகமாக நேசிக்கிறேன்
அது தடைகளை தாண்டுவது, சவால்களை எதிர்கொள்வது, ஒன்றாக இருப்பது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் உன்னை அதிகமாகவே நேசிக்கிறேன். உங்களுடன் வாழ்க்கையை செலவழிக்க என்னை தேர்வு செய்ததற்கும் சிறந்த வாழ்க்கைக்கும் நன்றி. இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார். அவருக்கு, ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











