#RIPVijay பிரச்சினை.. எல்லை மீறியது சண்டை.. கேலி செய்த அஜித் ரசிகரை கத்தியால் குத்திய விஜய் ரசிகர்!
அஜித் ரசிகரை விஜய் ரசிகர் கத்தியால் குத்திய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே, சமூகவலைதளங்களில் உண்டான மோதல், எல்லை மீறி கத்திக் குத்தில் முடிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்து பட்ட அஜித் ரசிகர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஆரம்பம் தொட்டு தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், பெரும்பாலும் அது எல்லை மீறியதில்லை. ஆனால், சமீபகாலமாக இந்த நிலை மாறி வருகிறது.
தங்களுக்கு பிடித்த நடிகருக்காக மற்றொரு நடிகரை மோசமாக விமர்சிக்கும் பழக்கம் ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகர்கள்கூட நட்பாக இருந்தாலும், ரசிகர்கள் மோதிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.

ரசிகர்கள் மோதல்:
அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைய சண்டை உலகளவில் பிரபலம். காரணம் டிவிட்டரில் அவர்கள் ஹேஷ்டேக் போட்டு, அதனை டிரெண்டிங்காக்கி சண்டை போட்டுக் கொள்கின்றனர். அப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர், #RIPVijay என்கிற டேக்கை டிரெண்ட் செய்து அஜித் ரசிகர்கள் சர்ச்சை ஏற்படுத்தினர்.

பிரபலங்கள் அறிவுரை:
இது தொடர்பாக கஸ்தூரி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் தங்களது சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்தனர். உலகில் வேறு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது, இப்படி பண்ணலாமா என அவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறி இருந்தனர். ஆனால், அந்த அறிவுரைகள் எதுவும் ரசிகர்கள் காதுகளைப் போய் சேரவில்லை போலும்.

அஜித் ரசிகருக்கு கத்திக்குத்து:
ஆம், விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை புழல் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த உமா சங்கர் (32) என்ற அஜித் ரசிகரை, அதே பகுதியைச் சேர்ந்த ரோஷன் (34) என்ற விஜய் ரசிகர் கத்தியால் குத்தியுள்ளார். உமா சங்கர், நடிகர் விஜய் பற்றி தரக்குறைவாக பேசியதால், கோபத்தில் கத்தியால் அவரின் தலை, கழுத்து, நெஞ்சு என சரமாரியாக வெட்டியுள்ளார் ரோஷன்.

அதிர்ச்சி:
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த உமா சங்கர், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ரோஷனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் இப்படி எல்லை மீறி விட்டதே என மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











