‘கருப்பு‘ என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்.. ஆர்.ஜே.பாலாஜி பேட்டி!
சென்னை: "கருப்பு" படத்தின் கதை என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்" என இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, உலகளவில் ரூ.240 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து மதுரை அழகர்கோவிலில் பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி உயர அருவாளை காணிக்கையாக சாத்தி நன்றி செலுத்தியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. ரொம்ப நன்றி கருப்பா என்று அவர் பிரார்த்தனை செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் கருப்பு: இதையடுத்து அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ஆர்.ஜே. பாலாஜி, நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பேஷின் பிரிட்ஜ் பகுதியில் ஒரு மர்ம நபர் என் கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகை மீண்டும் கிடைத்தாலும், அதை திரும்ப பெற நீதிமன்றத்தில் ஏராளமான தடவை அலைய வேண்டியிருந்தது. அந்த அனுபவம் என்னை மிகவும் பாதித்தது. அப்போதுதான் இந்த சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மேலும், மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் அரைக்கும் வழக்கத்தையும் கதையுடன் இணைத்து, கிராமத்து நம்பிக்கைகள், நீதிக்கான போராட்டம், மனிதர்களின் கோபம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை கலந்து 'கருப்பு' கதையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவம்: இயக்குநராக மட்டுமல்லாமல் உண்மை சம்பவத்தை திரைக்கதையாக மாற்றிய விதத்திற்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக படம் முழுவதும் இடம்பெறும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மற்றும் கிராமத்து பின்னணியுடன் கூடிய திரைக்கதை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தற்போது 'கருப்பு' திரைப்படம் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் 'கருப்பு' படம் பார்க்கும் ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியால் கருப்பசாமி வந்து ஆடும் வீடியோவும் இணையத்தில் வருவதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications