Sorgavaasal Trailer: வலிக்குதுடா.. வலிக்குது.. மொரட்டுத்தனமான செல்வராகவன்.. சொர்கவாசல் ட்ரைலர் ரிலீஸ்!
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். படத்திற்கு திரைக்கதை வடிவமைப்பில் சித்தார்த் விஸ்வநாத்துடன் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து பணியாற்றியுள்ளனர். படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ட்ரைலரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சில வாரங்களுக்கு முன்னர் இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார். படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரைலரைப் பார்க்கும்போது பெரும்பான்மையான கதை சிறையை மைய்யப்படுத்தி இருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன் இருந்து ஜெயிலில் உள்ள கைதிகளுக்கும் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் குறித்து இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ட்ரைலரில் வரும் கதபாத்திரங்களின் உடைகளைப் பார்க்கும்போது படத்தின் கதையானது 90களில் நடப்பதைப்போல் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
படத்தினை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரித்துள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றது. பிரின்ஸ் ஆண்டர்சன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கலான், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய செல்வா ஆர்.கே இந்தப் படத்திற்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்திற்கு கிரிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
ட்ரைலர்: ட்ரைலர் மொத்தம் 2 நிமிடம் 25 நொடிகளுக்கு உள்ளது. படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மொழியில் ரிலீஸ் ஆகின்றது. படத்தின் ஓடிடி உரிமத்தினை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ட்ரைலரைப் பார்க்கும்போது செல்வராகவனின் கதாபாத்திரம் மிகவும் முரட்டுத்தனமான கதாபாத்திரமாக இருக்கும் என்பது தெரியவருகின்றது. மேலும் கருணாஸ் சிறைத்துறை அதிகாரியாக வருகின்றார்.
இதுவா கதை? : சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி சூழ்நிலை காரணமாக செல்வராகவன் இருக்கும் ஜெயிலுக்குள் கைதியாக செல்கின்றார். ஏற்கனவே ஜெயிலில் செல்வராகவனைப்போல் மிகவும் முரட்டுத்தனமான கைதியாக ஹக்கிம் ஷா உள்ளார். இவர்களுக்கு இடையே உள்ள பிரச்னையில் ஆர்.ஜே. பாலாஜி மாட்டிக் கொள்கின்றார். கைதிகளுக்கு இடையே நடைபெறும் மோதலில், ஆர்.ஜே. பாலாஜி எப்படி சிக்குகின்றார், அதில் இருந்து தப்பித்தாரா இல்லையா எனக் கதை போகும்போலத் தெரிகின்றது.
நம்பிக்கை: ட்ரைலர் நன்றாகவே இருப்பதால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் படம் ஏற்கனவே ஓடிடி தள வியாபரத்தில் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகிவிட்டதால், தியேட்டர் வசூல் முற்றிலும் லாபக் கணக்கில்தான் சேரும் எனவும் கூறப்படுகின்றது. படத்தில் ஆர்.ஜே. பாலாஜி இருப்பதால் ஒரு ஃபீல் குட் படமாகவும் இது இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











