சொர்க்கவாசல் என்னுடைய கதை.. ஆர்ஜே பாலாஜி இப்படி பண்ணலாமா? நாளைய இயக்குநர் வேதனை!
Exclusive சென்னை:ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் 'சொர்க்கவாசல்'. இப்படத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் என்பவர் இயக்கி இருக்கிறார். இதில், செல்வராகவன், நட்டி, ஹக்கிம் ஷா, சானியா ஐயப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் கதை என்னுடைய கதை என்று கிருஷ்ணாகுமார் என்பவர் கூறியுள்ளார்.
எமது பிலிமிபீட் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் 2017 ஆம் ஆண்டு இந்த கதையை எழுதினேன், இந்த கதைக்கு நான் கிளைச்சிறை என்று பெயர் வைத்து இருந்தேன். இது நல்ல கதையாக இருப்பதால் இதை எப்படியாவது படமாக்க வேண்டும் என்ற ஆசையில், பல இடத்தில் கதையை வைத்துக்கொண்டு அலைந்தேன். அப்போது தான் ட்ரீம் வாரியார் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி ஒன்றில், 4000 ரூபாயை கட்டி கலந்துக்கிட்டேன். அதுல 70 பேரு கலந்துக்கிட்டாங்க.

கதை என்னுடையது: இதையடுத்து, ஒருநாள் கம்பெனியில் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது, அவங்க படத்தினுடைய கதை சுருக்கத்தை மெயில் ஐடிக்கு அனுப்ப சொன்னாங்க. கிளைச்சிறை உட்பட என்னிடம் இருந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை அனுப்பினேன். மீண்டும் அவர்களிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போ எந்த படத்தினுடைய பவுண்ட் ஸ்கிரிப்ட் உங்ககிட்ட இருக்கு என்று கேட்டார்கள். அப்போது, கிளைச்சிறை கதையின் பவுண்ட் இருந்ததால, அதை மெயில் மூலமா அவங்களுக்கு அனுப்பி வச்சேன். அதன் பிறகு எனக்கு எந்தவிதமான தகவலும் வரல. இதையடுத்து, கொஞ்ச நாள் நான் வெயிட் பண்ணி பாத்துட்டு மறுபடியும் அவங்களுக்கு போன் பண்ணி கேட்டேன், மெயில் வரும் வெயிட் பண்ணுங்க என்றார்கள்
உடைந்து போனேன்: அப்போ சில நாட்கள் கழித்து மெயில் வந்தது அதில், உங்கள் கதை தேர்வாகவில்லை என்று வந்தது. அதைப்பார்த்து நான் மிகவும் உடைந்து போய்விட்டேன். என் மனைவிக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது, எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். இந்த நேரத்துல சினிமா சினிமா அலைஞ்சிட்டு இருந்தா, குடும்பத்தை தொலைச்சிடுவேன் என்று, கிடைச்ச வேலை வேலையை செய்துகிட்டு வருகிறேன்.
அது என் கதை: இந்த நேரத்துல தான் 23ஆம் தேதி சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் வெளியானது. அதை பார்த்த என்னுடைய நண்பர்கள், அது உன்னுடைய கதை மாதிரி இருக்கு என்றனர். உடனே நானும் டிரைலரைப் பார்த்துவிட்டு உடைந்து போய்விட்டேன், அது என் கதை தான். இது விஷயமா ஆர்.ஜே.பாலாஜியை சந்தித்து உண்மைய சொல்ல கஷ்டப்பட்டேன். ஆனால், அவரை சந்திக்க முடியல. இதையடுத்து தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவை சந்திக்க முயற்சி செய்தேன். அதுவும் முடியல, அதன் பிறகு, நான் பாக்யராஜ் சார் மீட் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவர் கதையை பதிவு பண்ணி இருக்கீங்களா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். அப்போ என்னால எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்.
திருடிட்டாங்க: அந்த கதை என்னுடைய அனுபவத்தில் நான் எழுதியது. நான் 2017 ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கல் காரணமாக சைதாப்பேட்டை கிளை சிறையில் 15 நாட்கள் இருந்தேன். அந்த கிளை சிறையில இருக்கும் போது தான் எனக்கு அங்கு இருக்கிறவங்களுடைய ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கதை எழுத வேண்டும் என்று தோன்றியது. அங்கு கதை எழுத பேப்பர் கூடஇல்லை, பேப்பரை மனு போட்டுத்தான் வாங்கினேன். அப்போ கூட இரண்டே இரண்டு பேப்பர் தான் கொடுத்தாங்க, அந்த பேப்பர்ல எழுதுன கதை தான் இது.
நான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து அனுபவிச்சு அந்த கதையை அழகாக மெருகேற்றி வைத்திருந்தேன். அந்த கதையை திருடிட்டாங்க. ஆர்ஜே.பாலாஜி போற வேகத்துல நிறைய பேர மிதிச்சிக்கிட்டே போயிட்டே இருக்காரு. நான் நினைத்து இருந்தா, இந்த படத்தை நிறுத்தி இருக்க முடியும். ஆனால் நான் அதை செய்ய விரும்பல என்று மிகுந்த மனவேதனையுடன் கிருஷ்ணா குமார் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











