விமர்சனம் பண்றது அவங்கவங்க சுதந்திரம்.. எல்லாரோட ஃபோனையும் புடுங்க முடியாது.. ஆர்ஜே பாலாஜி காட்டம்!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் பயணித்துவரும் ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள சொர்க்கவாசல் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள நிலையில் இன்றைய தினம் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியை படக்குழுவினர் சிறப்பாக நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இணைந்திருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தனர். நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜியின் பேச்சும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

நடிகர் ஆர்ஜே பாலாஜி: நடிகர் ஆர்ஜே பாலாஜி நானும் ரவுடிதான், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துவந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னை இயக்குநராகவும் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். அந்த வகையில் நயன்தாராவுடன் அவர் நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் மிகச்சிறப்பான கவனத்தை பெற்றிருந்தன. அந்த வகையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் சூர்யா 45 படத்தையும் இயக்க அவர் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் வரும் 29ம் தேதி அவரது சொர்க்கவாசல் படமும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் படம்: படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள நிலையில் படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் சிறப்பாக நடந்துள்ளது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு ட்ரெயிலரை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஏராளமான வியூஸ்களையும் பெற்று வருகிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் உள்ளிட்டவர்களின் பேச்சு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி காட்டம்: மேலும் நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜியும் சிறப்பான வகையில் பேசி அசத்தினார். தன்னை பாவாடை என்று பலரும் கலாய்த்ததாகவும் தான் பாவாடை இல்லை வேஷ்டிதான் அணிந்திருக்கிறேன் என்றும் அவர் கூறினார். ஒரு பொருளின் தரத்தை விமர்சிப்பது போலவே, ஒரு படத்தையும் யார் வேண்டுமானாலும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது அவர்களின் சுதந்திரம் என்றும் ஒவ்வொருவரின் போனையும் போய் நாம் புடுங்க முடியாது என்றும் பேசியுள்ளார். அந்த கட்டுப்பாடு நம்மிடம் இல்லை என்றும் ஆர்ஜே பாலாஜி தெளிவுப்படுத்தியுள்ளார்.
பாவாடை என விமர்சனம்: ஒரு படம் நன்றாக இருந்தால் மீடியாவும் மக்களும் அதை சிறப்பாக்குவார்கள் என்று கூறியுள்ள ஆர்ஜே பாலாஜி, ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ட்ரெயிலர் ரிலீஸ் குறித்து தான் சமூக வலைதளங்களில் பதிவு செய்தபோது வினியோகஸ்தர் எஸ்ஆர் பிரபு மீதான கடுப்பில் தன்னை பலரும் திட்டியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பாவாடை, சங்கி என்று தன்னை பலரும் பேசியது குறித்தும் அவர் கடுப்பை வெளிப்படுத்தியுள்ளார். எந்தக் கட்சியின் ஐடி விங்காக இருந்தாலும் அவர்களுக்கும் தன்னுடைய கோரிக்கையை அவர் தெரிவித்துள்ளார்.
டார்கெட் செய்து அடிக்க வேண்டாம்: அவர்கள் அரசியல் செய்யட்டும், வாராவாரம் வெளியாகும் படங்களை விமர்சித்து அவர்களின் எனர்ஜியை வீணாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் அடுத்தடுத்து வீணாக சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் அனைத்து படங்களையும் போய் பார்த்து அவர்கள் விமர்சனங்களை பதிவு செய்யலாம் ஆனால் ஒருவரை டார்கெட் செய்து அடிப்பது பயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











