விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியலையே.. மருத்துவமனையில் இருந்து ஆர்.கே. செல்வமணி வேதனை
சென்னை: கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என வேதனை தெரிவித்து அவர் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணிக்கு உயிரிழந்த விஜயகாந்துக்கு பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், 3000 போலீஸார் பாதுகாப்புடன் இன்று தீவுத்திடலில் காலை முதலே அவருக்கு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.

கேப்டன் பிரபாகரன் இயக்குநர்: விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கி கேப்டன் விஜயகாந்த் என்று மாற்றிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஏன் அஞ்சலி செலுத்த வரவில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி இருந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் தான் சிகிச்சைப் பெற்று வருவதால் தான் இறுதி அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என அவர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாணவனாக இருந்த என்னை: மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த போது மாணவனாக இருந்த என்னை எப்படி கைகளை பிடித்துக் கொண்டு சூப்பர் தம்பி என தட்டிக் கொடுத்தாரோ, கடைசியாக அவரது பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தேன். எதுவுமே பேசாமல் அப்படியே அதே போலவே கைகளை மட்டும் பிடித்துக் கொண்டு அவர் பார்த்த பார்வைக்குள் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது என்றார்.
மனசு ரொம்ப வேதனையா இருக்கு: முதல் ஆளாக கேப்டன் விஜயகாந்த் உடலை பார்க்க ஓடோடி சென்றிருக்க வேண்டியவன் நான். ஆனால், நோய் வாய்ப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன். அவரது உடல் இந்த வழியாக கொண்டு செல்லப்பட்ட சத்தம் மருத்துவமனைக்குள் ஒலித்தது. விஜயராஜ் எனும் மனிதன், விஜயகாந்த் எனும் நடிகர், கேப்டன் எனும் தலைவர் என்றைக்குமே மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து இருப்பார் என்று உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ஆர்.கே. செல்வமணி.


Click it and Unblock the Notifications











