என்னடா ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன்.. இளையராஜாவை கடுமையாக விமர்சித்த ஆர்.கே. சுரேஷ்.. என்ன பிரச்சனை?
சென்னை: ரஜினிகாந்தின் கூலி, மஞ்சுமெல் பாய்ஸ் என வரிசையாக பல படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை இயக்குநர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அவரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படத்துக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டே இருக்கிறார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் 3 பாடல்களை ஆதிக் ரவிச்சந்திரன் வரிசைக் கட்டி வைத்த நிலையில், தற்போது அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டிலேயே இதுவரை குட் பேட் அக்லி திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், 5 கோடி ரூபாயை கொடுங்க என இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்நிலையில், இதனை பார்த்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதற்கு கீழே இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
200 கோடி வசூல்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் என ஜி.வி. பிரகாஷ் குமார் அறிவித்த நிலையில், உலகளவில் இந்த படம் 200 கோடி வசூலை கடந்து விட்டதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ராகுல் 100 கோடி வசூல் என்கிற அறிவிப்பை மட்டும் வெளியிட்ட நிலையில், உலகளவில் 100 கோடி வசூலா? அல்லது தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்ப, ஜி.வி. பிரகாஷ் அதற்கு தெளிவான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
5 கோடி கேட்டு நோட்டீஸ்: இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி மற்றும் ஒத்த ரூபா தாரேன் உள்ளிட்ட படங்கள் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற நிலையில், அந்த பாடல்கள் அனுமதியின்றி இடம்பெற்றதற்கும் அந்த பாடல்களை தேவையில்லாமல் வேறு ஒரு இசையாக மாற்றி கெடுத்துவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து இளையராஜா தரப்பு 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்து இருக்கிறது.

சம்பளத்தை திருப்பிக் கொடுங்க: "என்னடா ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன், பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களிடம் தான் உள்ளது. அவருடைய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க சொல்லுங்க" என இளையராஜா விமர்சித்துள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ். அஜித் குமாரின் தீவிர ரசிகர் ஆர்.கே. சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. பில்லா பாண்டி எனும் படத்திலும் இவர் ஹீரோவாக அஜித் ரசிகராகவே நடித்துள்ளார்.
ஆதரவும் எதிர்ப்பும்: இளையராஜா சட்டப்படி தான் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் அவருக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் ஏன் இத்தனை பாடல்களை வைத்தார் என்று இளையராஜா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனைத்து தயாரிப்பாளர்களிடமும் என்ஓசி வாங்கிய பின்னர் தான் ஆதிக் இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளார். இளையராஜாவுக்கும் இந்த பாடல்களின் உரிமைக்கும் சம்மந்தம் இல்லை என அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக இளையராஜா தொடுத்துள்ள வழக்கு என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











