Michaung - மிக்ஜாம் புயல்.. ரோபோ சங்கரின் காலை காவு வாங்கிய வெள்ளம்.. நீந்தியபடி அவர் செய்த செயலை பாருங்க
சென்னை: Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நடிகர் ரோபோ சங்கர் காயமடைந்திருக்கிறார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கிவருகிறது. காலையில் ஆரம்பித்த மழை இப்போதுவரை விடாமல் தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் சென்னையில் மழை நீர் தேங்கியிருக்கிறது. அதனால் மக்களும் கடுமையான சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். 2015ஆம் ஆண்டை மீண்டும் கொண்டுவந்துவிடுமோ என்று அஞ்சகின்றனர்.

2015க்கும் மேல்: அதேசமயம் 2015ஆம் ஆண்டு 33 செ.மீ மழை பெய்தது. இதனால் சென்னை வெள்ளக்காடானது. தற்போதோ 34 செ.மீ மழை பெய்து 2015 அளவை தாண்டியிருக்கிறது. இன்று இரவுவரை மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதால் மக்கள் உச்சக்கட்ட அச்சத்தில் இருக்கின்றனர். அதேசமயம் தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடு: சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கிறது. குறிப்பாக பள்ளிக்கரணை லேக் வியூ அப்பார்ட்மெண்ட்டில் வெள்ளம் சூழ்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. அதேபோல் அரங்கநாதன் சப் வே, வடபழனி முருகன் கோயில் குளம், சூளைமேடு, வேளச்சேரி என பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மக்கள் அவதி: இதன் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மொத்தம் 4000 மரங்கள் சாய்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. பல இடங்களில் மின்சாரம் இல்லை. உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பத்திருக்கிறது. இதனால் ஆங்காங்கு உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியிலும் தன்னார்வலர்கள் இறங்கியுள்ளனர்.
ரோபோ சங்கர்: இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "மக்களே வணக்கம். இந்த மழையிலும் ஆண்கள்தான் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்று வருகிறோம். நானும் அப்படித்தான் இன்று காலை சென்று வீடு திரும்பினேன். முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது.
அப்போது எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டிலிருந்து ஒரு தகரம் நீரில் விழுந்து மிதந்து வந்து எனது காலை கிழித்துவிட்டது. உடனே நான் நமது காலைதான் தகரம் கிழித்துவிட்டது. மற்றவர்களின் காலை கிழிக்கக்கூடாது என்ற பொதுச்சேவையில் நீந்தியபடியே அந்த தகரத்தை இழுத்து வந்து எனது வீட்டு வாசலில் போட்டுவிட்டேன். இப்படி எல்லோரும் பொதுச்சேவையில் இறங்குங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











