Robo Shankar - பத்து நிமிஷத்துல பாடி வந்துடும்னு சொன்னாங்க.. நான் வந்தேன்.. ரோபோ ஷங்கர்
சென்னை: Robo Shankar (ரோபோ ஷங்கர்) தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தன்னை பற்றி வந்த போலியான செய்திகள் குறித்து வருத்தத்துடன் பேசியிருக்கிறார் ரோபோ ஷங்கர்.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர்.

குவிந்த பட வாய்ப்புகள்: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ ஷங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
கிளி வளர்ப்பு: தனது கரியரின் பீக்கில் இருந்தார் ரோபோ ஷங்கர். இப்படிப்பட்ட சூழலில் வெளிநாட்டு கிளிகளை தனது வீட்டில் வளர்த்துவந்தார். ஆனால் அந்த கிளிகளை வளர்ப்பதற்கு ரோபோ ஷங்கர் எந்த அனுமதியையும் பெறவில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து அந்த கிளிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் திரையுலகில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றது.
உடல்நலக்குறைவு: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். மேலும் ரோபோ ஷங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர்.

ரோபோ ஷங்கர் வருத்தம்: அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்ததை அடுத்து தீவிர சிகிச்சை எடுத்து தற்போது அதிலிருந்து மீண்டிருக்கிறார். மேலும் குடியை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தன்னை பற்றி வந்த போலியான செய்திகள் குறித்து பேசியிருக்கிறார் ரோபோ.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், "உடல்நலம் சரியில்லாமல் ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தேன். அந்த நிலைமையிலிருந்து 2.0 வெர்ஷனாக மீண்டு வந்துள்ளேன். படுத்த படுக்கையாக நான் இருந்தபோது பல யூட்யூப் சேனல்களில்; ரோபோ ஷங்கர் இறந்துவிட்டார் பத்து நிமிடங்களில் பாடி வந்துடும்; ரோபோ ஷங்கர் மரணம் சோகத்தில் கதறிய குடும்பம் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அது மனதை ரொம்பவே பாதித்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











