ரோபோ ஷங்கர் குடும்பத்தைக் காப்பாற்றிய தனுஷ்.. கொஞ்ச நேரத்தில் கிடைத்த எதிர்பார்க்காத உதவி!
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர். விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். நகைச்சுவை கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டு இருந்த ரோபோ ஷங்கர், அதன் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்தும் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார். அதற்கு காரணம் பலருக்கும் தெரியாமல் இருந்தது. இது குறித்து ரோபோ ஷங்கரே பேட்டி ஒன்றில் கூறும்போது தான் திடுக்கிடும் உண்மை பலருக்கும் தெரியவந்தது.
ரோபோ ஷங்கர் மதுவுக்கு அடிமையாகி விட்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்று விட்டதாகவும் அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல், யாரும் தன்னைப் போல் ஆகிவிடக்கூடாது என்று பலமுறை கூறியுள்ளார். அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த காலகட்டத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற மிகவும் முக்கியமான பங்காற்றியவர் என்றால் அது மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் தான். இதற்காக ரோபோ ஷங்கர் மற்றும் அவரது மொத்த குடும்பமும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்துள்ள ரோபோ ஷங்கர் தற்போது தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அதே நேரத்தில் அவ்வப்போது பேட்டிகளும் அளித்து வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் தனுஷ் குறித்தும் அவர் தனக்குச் செய்த உதவி குறித்தும் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தனுஷ்: தனுஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என இருவரும் மாரி மற்றும் மாரி 2 படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். அதற்கு முன்னர் இருந்தே இவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தாலும், இருவரும் இணைந்து பணியாற்றியது இந்த படத்தில்தான். மாரி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. தனுஷ் குறித்து அவர் பேசுகையில், " நான் கஷ்டத்தில் இருந்த போது எனக்கு மனதளவிலும் சக மனிதராகவும் மிகவும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். கொரோனா காலகட்டத்தில் நானும் எனது குடும்பமும் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். அப்போது எனக்கு பண ரீதியாக மிகப்பெரிய உதவியாக இருந்தவர் தனுஷ் தான்.

உதவி: அவர் என்னை உடம்புதான் ரோபோவுக்கு பெருசு. மத்தபடி குழந்தை மாதிரினு சொல்வார். நான் அவருக்கு உதவி கேட்க போன் செய்தபோது அவர் விமான நிலையத்தில் இருந்தார். இன்னும் 5 நிமிடத்தில் கிளம்பிவிடுவார். அந்த நேரத்தில் நான் அவரது மேனேஜருக்கு போன் செய்தேன். அவரோ, சார் இப்போது விமான நிலையத்தில் இருக்கிறார் என்று கூறினார். அவரிடம் இருந்து தனுஷ் அவர்களின் போன் நம்பரை வாங்கி, அவருக்கு போன் செய்து உதவி கேட்டேன்.
10 நிமிடத்தில்: நான் பேசியதைக் கேட்ட பின்னர், போன வைங்க 10 நிமிடத்தில் பாருங்க என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். அதன் பின்னர் 10 நிமிடத்தில் நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய உதவி எனக்கு கிடைத்தது. நான் தனுஷ் சாருக்கும் நன்றி சொல்லனும்" என்று பேசியுள்ளார். ரோபோ ஷங்கரின் உயிரைக் காப்பாற்றியது மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் என்றால் குடும்பத்தைக் காப்பாற்றியது தனுஷ் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











