Robo Shankar: கெட்ட பழக்கவழக்கம்... தற்கொலை முயற்சி... இதுதான் நடந்தது... ரோபோ ஷங்கர் ஓபன்!
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக அசத்தி வந்த ரோபோ சங்கர் தற்போது சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக அவர் எடை குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதுகுறித்து பலவிதமான செய்திகள் வெளியான நிலையில், ரோபோ சங்கரே மனம் திறந்து பேசியுள்ளார்.
உடல்நிலை குறித்து மனம் திறந்த ரோபோ சங்கர்:விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்களில் ரோபோ சங்கரும் முக்கியமானவர். கலக்கப் போவது யாரு, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் கலக்கிய ரோபோ சங்கர், பின்னர் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். மாரி 2, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே வெளியே வராமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்தார் ரோபோ சங்கர். மேலும், அவர் மிகவும் உடல் மெலிந்து சோர்வாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இதனால் ரோபோ சங்கருக்கு உடல்நிலை சரியில்லை என பலவிதமான செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவரது மனைவியும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில், தற்போது ரோபோ சங்கரே அவரது உடல்நிலை குறித்து மனம் திறந்துள்ளார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது போதை பழக்க வழக்கங்களால் ஏற்படும் தீமைகள், அதனால் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து பேசினார். பின்னர் பல்வேறு நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ரோபோ சங்கர், "கடந்த சில மாதங்களாக என்னை பற்றி தான் யூடியூப்பில் அதிகமக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு கிளியை வளர்த்து அதனால் சில பிரச்சினைகளை சந்தித்தேன். கிளி நம்முடன் பேசும், விளையாடும் என நினைத்து வளர்த்தேன். அது என்ன வகையான கிளி என்பது கூட எனக்குத் தெரியாது" என்றார். அதன்பின்னர் அவரது உடல்நலம் பற்றி விளக்கம் கொடுத்தார்.
முதலில் ஒரு படத்துக்காக உடல் எடையை குறைத்ததாகவும், பின்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார். 5 மாதங்கள் வரை படுத்த படுக்கையாக இருந்தேன், ஒருகட்டத்தில் சாவின் விளிம்புக்கே சென்றுவிட்டேன் என்றுள்ளார். இது எல்லாவற்றுக்கும் காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கவழக்கங்கள் தான் என மதுவுக்கு அடிமையானதை குறிப்பிட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் ரோபோ சங்கர் மனம் திறந்துள்ளார்.
மதுவுக்கு அடிமையானதால் இரவு நேரங்களில் எழுந்து கிறுக்கு மாதிரி அலைய ஆரம்பித்தேன். அப்போது நக்கீரன் ஆசிரியர் தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு தான் என் உடலில் எந்தந்த உறுப்புகள் எல்லாம் சேதமடைந்துள்ளது என்பது தெரியவந்தது. மருத்துவரின் அறிவுரையை கேட்டு இப்போது தேவையில்லாத எல்லா பழக்கங்களையும் விட்டுவிட்டேன். இந்த இக்கட்டான நேரத்தில் என்னை இரவு பகலாக பார்த்துக்கொண்டது தனது குடும்பம் தான். அதனால் தான் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதாக மனம் திறந்து பேசினார். மேலும், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட வேண்டாம் எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.


Click it and Unblock the Notifications











