நெஞ்சோடு இருக்கும் சோகம்.. புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கும் ரோபோ சங்கர் மனைவி.. குவியும் வாழ்த்து
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அண்மையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குடும்பத்தினர், திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. சூழல் இப்படி இருக்க சங்கர் மறைந்த பிறகு அவரது மனைவியான பிரியங்கா புதிய பயணத்தை தொடங்கியிருப்பதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனவர் ரோபோ சங்கர். மிமிக்ரி, டைமிங் கவுண்ட்டர்கள் என பல வித்தைகளை தன்னிடம் கொண்டிருந்த அவர்; நடன கலைஞர் பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார். இந்திரஜாவும் தந்தை போலவே திரைத்துறையில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது.
தனுஷ் கொடுத்த வாய்ப்பு: ரோபோ சங்கரின் திறமையை கவனித்து தனுஷ்தான் அவரை திரைத்துறைக்கு அழைத்து வந்தார். மாரி படத்தில் சனிக்கிழமை என்ற கேரக்டரை ஏற்று அப்ளாஸை அள்ளிய அவர் தொடர்ந்து வாயை மூடி பேசவும், வேலைக்காரன், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தேசிங்கு ராஜா, விஸ்வாசம் என பல படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் தனித்தே தெரிந்தார் அவர்.

தப்பித்த ரோபோ: அவரது கரியர் உச்சத்தில் இருந்தது. அதேநேரம் அவருக்கு குடிப்பழக்கமும் உச்சத்தில் இருந்தது. இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். எப்படியோ குடும்பத்தினரும், நண்பர்களும் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து அதிலிருந்து மீட்டு கொண்டுவந்தார்கள். அப்படி வந்த அவர் அத்தனை தீய பழக்கங்களிலிருந்தும் வெளியே வந்து புது மனிதராக காட்சியளித்தார். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி சின்சியராக நடித்துவந்தார்.
உயிரிழந்த ரோபோ சங்கர்: இதன் காரணமாக குடும்பத்தினரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். கடந்த வருடம்தான் மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்தார். இப்படிப்பட்ட நிலைமையில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தார்.
பிரியங்காவின் புதிய பயணம்: அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி இறுதி ஊர்வலத்தின்போது பிரியங்கா அழுதபடி நடனமாடியது பார்ப்போரை கலங்க செய்தது. அவரை எப்படி தேற்றுவது என்றுதான் குடும்பத்தினரும், நெருங்கியவர்களும் யோசனையில் இருந்தார்கள். இந்நிலையில் பிரியங்கா தனக்குள் இருக்கும் சோகத்தை மறைத்து புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
என்ன பயணம்?: அதாவது தனியார் யூடியூப் சேனல் ஒன்று சமையல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை ருசி நேரம் என்ற பெயரில் நடத்தவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கேற்று தனது கைப்பக்குவத்தை ரசிகர்களுக்கும் சொல்லிக்கொடுத்து சமைக்கவிருக்கிறார். அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கவிருக்கிறார். விரைவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. அதுதொடர்பான ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சோகத்தை மறைத்து புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கும் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











