அப்படி மட்டும் இருந்திருந்தால் ரோபோ சங்கரை பத்திரமா பார்த்திருக்கலாம்.. மனைவி பிரியங்கா உருக்கம்
சென்னை: ரோபோ சங்கர் கடந்த மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு எதிர்பாராத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் அதற்கு முன்னரும் ஒருமுறை சாவின் விளிம்புவரை சென்றுவந்திருந்தார் அவர். சங்கர் உயிரிழந்திருக்கும் நிலையில் அவரது மனைவி தனியார் யூடியூப் சேனல் நடத்தும் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அதில் அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
மதுரையில் மேடையில் தோன்றி தனது திறமையை வெளி காண்பித்த ரோபோ சங்கர் பிறகு சின்னத்திரையில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதில் அவர் பலரையும் பல வருடங்கள் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். அவரது திறமையை கவனித்த தனுஷ் தனது மாரி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க; அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துகொண்டு சரசரவென்று முன்னேறினார்.
டைமிங் கிங்: காமெடி ரோலில் பின்னி பெடலெடுத்தார் ரோபோ. அதிலும் வாயை மூடி பேசவும் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த குடிகார கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தன்னை பிஸியாகவே வைத்திருந்தார். கண்டிப்பாக சங்கருக்கு திரைத்துறையில் மிகப்பெரிய இடம் இருக்கிறது என்று கணிக்கப்பட்டது. அதை நோக்கியே அவரது பயணமும் இருந்தது.

சாவின் விளிம்புவரை: இப்படிப்பட்ட நிலைமையில்தான் குடி பழக்கம் அதிகமானதால் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக நண்பர்களும், குடும்பத்தினரும் சிகிச்சை பெற வழிவகுத்து பத்திரமாக மீட்டு கொண்டுவந்தார்கள். அவரும் சிகிச்சையிலிருந்து மீண்டு தனது கரியரில் கவனம் செலுத்தினார். அதுமட்டுமின்றி தீய பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு விளம்பரத்திலும் நடிக்க செய்தார்.
உயிரிழந்த ரோபோ சங்கர்: இன்னும் நீண்ட வருடங்கள் அவர் ஆரோக்கியத்தோடு இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மாதத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கையில் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனாது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் தள்ளியது.
பிரியங்காவின் புதிய பயணம்: முக்கியமாக பிரியங்காவை நிலைகுலைய செய்திருந்தது சங்கரின் மரணம். இறுதி ஊர்வலத்தில் சோகத்தோடு நடனமாடி தனது துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலைமையில் கணவரின் மரணத்தை நினைத்து வீட்டிலேயே முடங்கி இருக்காமல் தனியார் யூடியூப் சேனல் நடத்தும் ருசி நேரம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.
உருகிய பிரியங்கா: இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா. 'அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நான் ரோபோ சங்கராகவும், அவர் பிரியங்காவாகவும் பிறக்க வேண்டும். ஏனெனில் இந்த ஜென்மத்தில் நான் என்னவெல்லாம் பார்த்தேனோ அதெல்லாம் எனக்கு கிடைக்கும்படி செய்தார். அதை நான் அவருக்கு திரும்பி செய்ய வேண்டும். நான் அவரை நிறைய காதலிக்கதான் செய்தேன். என்னவொன்று இன்னும் நிறைய காதலித்திருந்தால் அவரை இன்னும் பத்திரமாக பார்த்திருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











