பிரமாண்டமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் ரிசப்ஷன்.. திரையுலகினர் குவிந்து வாழ்த்து மழை
சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை கடந்த 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரையுலகினர் கலந்துகொள்வதற்காக திருமணம் ரிசப்ஷன் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ சங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ சங்கர்.

குவிந்த பட வாய்ப்புகள்: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ சங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர் என்பது நினைவுகூரத்தக்கது.
உடல்நலக்குறைவு: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோசங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். மேலும் ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர். அதனை ரோபோ சங்கரும் ஒத்துக்கொண்டார். மேலும் இப்போது மது பழக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வந்திருக்கும் அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
ரோபோவின் மகள்: இதற்கிடையே ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இவர் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில், முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிகில் படத்தில் அவர் ஏற்றிருந்த பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த அவர் அதற்காக பாராட்டையும் பெற்றார். இந்தச் சூழலில் அவர் தனது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை காதலித்துவந்தார். அவருக்கும் கார்த்திக்குக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடத்திவைக்க முடிவானது.
மதுரையில் திருமணம்: அதன்படி கடந்த 24ஆம் தேதி மதுரையில் இவர்களது திருமணம் சூப்பராக நடைபெற்றது. திருமண நிகழ்வில் அறந்தாங்கி நிஷா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் இந்திரஜாவின் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமையை தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வாங்கியிருக்கிறது. அதுவும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருந்தாலும் தனது மகள் திருமணம் குறித்து முடிவெடுப்பது சங்கரின் தனிப்பட்ட உரிமை என்று அவருக்கு ஆதரவு குரல்கள் எழுந்தன.
திருமண ரிசப்ஷன்: திருமணம் மதுரையில் நடைபெற்றதால் பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் கலந்துகொள்வதற்கு ஏதுவாக சென்னையில் நேற்று இரவு பிரமாண்டமாக ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஹீரோக்களும், திரையுலகை சேர்ந்த பிற பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரிசப்ஷனுக்காக இந்திரஜா லைட் பிங்க் நிற புடவை அணிந்து ஜொலித்தார். ரோபோ சங்கரும் கோட் சூட் அணிந்து வந்திருந்த பிரபலங்களை வரவேற்றார். இந்த ரிசப்ஷன் நிகழ்ச்சியும் தனியார் யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











