69th National Film Awards - 69ஆவது தேசிய விருதுகள்.. சிறந்த படமாக ராக்கெட்ரி : நம்பி விளைவு தேர்வு
டெல்லி: Rocketry The Nambi Effect (ராக்கெட்ரி நம்பி விளைவு) கடந்த 2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் தேர்வாகியுள்ளது.
இந்திய திரைத்துறையில் அனைவருமே பெற விரும்பும் விருது தேசிய விருது. அந்த விருதை பெற்றால் தேசிய அளவில் அடையாளப்பட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். இதற்காக பல படைப்பாளிகள் கடுமையாக உழைத்து படங்களை கொடுப்பது வழக்கம். இந்தச் சூழலில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் தணிக்கை பெற்ற படங்கள் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 283 படங்கள் போட்டியில் இருந்ததாக ஜூரிக்கள் தெரிவித்தனர்.

தமிழ் படங்கள்: தமிழிலிருந்து ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்த ஜெய் பீம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன், சமுத்திரக்கனி இயக்கத்தில் அவர், தம்பி ராமைய்யா நடித்த விநோதய சித்தம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.
பிற படங்கள்: தெலுங்கிலிருந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர், சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா,மலையாளத்திலிருந்து நயாட்டு, மின்னல் முரளி, ஹிந்தியிலிருந்து 83, சூர்யவன்சி, கங்குபாய் கத்தியவாடி, மாதவன் இயக்கிய ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களும் சிறந்த படங்களுக்கான ரேஸில் இணைந்திருந்தன. எனவே இவற்றில் எந்த படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
விருது வென்ற படம்: இந்நிலையில் இன்று மாலை 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படமானது நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தான் இயக்கிய முதல் படத்திற்கே தேசிய விருது கிடைத்ததால் மாதவன் உற்சாகத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











