தொழில்நுட்ப கோளாறுதான்... மதியம் வெளியாகும்... தயாரிப்புத் தரப்பு விளக்கம்
சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது மன்மத லீலை. இந்தப் படம் இதுவரை திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், இதுகுறித்து தயாரிப்பு தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

மன்மத லீலை படம்
வெங்கட் பிரபுவின் மாநாடு படம் கொடுத்த வெற்றியை அடுத்து அவர் தற்போது மன்மத லீலை படத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ளார். முன்னதாக படத்தின் கிளிம்ப்ஸ், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தூக்கலான முத்தக்காட்சிகள்
ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின் காட்சிகளை பார்த்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதில் முத்தக்காட்சிகள் தூக்கலாகவே காணப்பட்டது. ஆனால் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டில் பேசிய வெங்கட் பிரபு, இந்தப் படம் பெரியவர்களுக்கான படம் என்றாலும் விரசமாக இருக்காது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆவலில் இளைஞர்கள்
ஆயினும் இந்தக் காட்சிகள் இளைஞர்களிடையே மிகுந்த ஆவலை உண்டு செய்துள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இன்றைய தினம் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் ஷோவை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

டைட்டில் பிரச்சினை
இந்நிலையில் தற்போது படம் டைட்டில் பிரச்சனையை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தற்போது வரை படம் திரையரங்குகளில் ரிலீசாகாமல் உள்ளது. படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மதியம் வெளியாகும்
இந்நிலையில் படம் தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டே ரிலீசாகாமல் உள்ளதாகவும் பகல் ஷோவில் கண்டிப்பாக ரிலீசாகும் என்றும் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் தெரிவித்துள்ளது. கடவுள் இருக்கார் என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபன் பண்ணுங்க
மேலும் படத்தை பார்த்து ஃபன் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க என்றும் அந்த ட்வீட்டில் ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் தெரிவித்துள்ளது. வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தின் தாறுமாறு வெற்றியை அடுத்து அவரது மன்மத லீலை படம் இன்றைய தினம் ரிலீசாக இருந்த நிலையில், படம் தற்போதுவரை ரிலீசாகாமல் உள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











