Hukum World Tour: சீனியர்களை ஓரம் கட்டி.. பிசுரு தட்டாமல் சாதனை படைத்த ராக் ஸ்டார் அனிருத்!
சென்னை: ராக் ஸ்டார் அனிருத் எப்படித்தான் தனது நாட்களை ஒதுக்குகிறார் என்றே தெரியவில்லை. நேற்று அதாவது, ஆகஸ்ட் 23ஆம் தேதி அவரது ஹுக்கும் வோல்ட் டூர் இசை நிகழ்ச்சி கூவத்தூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படமான மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா என செம பிஸியாக இருக்கிறார். கடந்த வாரம் இவரது இசையில் ரஜினி நடிப்பில் கூலி வெளியானது. இப்படி இருக்கும்போது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமிய ஹுக்கும் வோல்ட் டூர் நிறைவு விழா இசை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ண பூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

தரமான வசதிகள்: பிரமாண்டமான வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.
இறுதிக் கச்சேரி: ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது. "ஹுக்கும்" Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பதிந்துள்ளது.

பிசுரு இல்லாமல்: இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் திரையிசையின் உச்சத்தில் உள்ளார். வேறு யாராவது இசையமைப்பாளர் இசையில் ஒரு நல்ல பாடல் வந்தால் கூட, ரசிகர்கள் தாங்களாகவே இது அனிருத் பாடல் என யோசிக்கும் அளவுக்கு வளர்ந்து உயர்ந்து நிற்கிறார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த அனிருத், சென்னையை அடுத்துள்ள குவாத்தூரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு கடைசியில், தேதி மாற்றம் செய்யப்பட்டது. தேதி மாற்றத்திற்கான காரணமாக பார்க்கிங் வசதி போதுமானதாக இல்லை எனவும் கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத்தான் இசை நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தியுள்ளார்கள். அதுவும் சென்னையில் இதுவரை நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளிலேயே அதிக பார்வையாளர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியாக இந்த இசை நிகழ்ச்சி சாதனை படைத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட பலரும் சீனியர் இசையமைப்பாளர்களை விடவும் அதிக பார்வையாளர்களுடன் வெகு சிறப்பாக பிசுரு இல்லாமல் இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டாரா என பராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











