ரகுவரன் இறப்பை விட..பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்டது வேதனையாக இருந்தது.. ரோகிணி பேட்டி!
சென்னை : ரகுவரன் இறந்த போது பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்ட விதம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என்று நடிகை ரோகிணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என பெயர் எடுத்த ரகுவரன்,1982ம் ஆண்டு ஏழாம் மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானாலும், குணசித்திர கதாபாத்திரம், வில்லன் என அனைத்திலும் அசத்தினார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளில் சிறந்த நடிகர் என பெயர் எடுத்த ரகுவரன், கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதிஉயிரிழந்தார்.

நடிகர் ரகுவரன்
இவரது நினைவு நாளான மார்ச் 19ந் தேதி, ரோகினி தனது ட்விட்டர் பக்கத்தில், மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத்தான் தொடங்கியது. ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ரகு இப்போது இருந்திருந்தால், சினிமாவின் இந்த காலகட்டத்தை மிகவும் நேசித்திருப்பார், ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என பதிவிட்டு இருந்தார். 1996ம் ஆண்டு ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரன் 2004ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

மனதை காயப்படுத்தியது
இந்நிலையில், நடிகை ரோகிணி அளித்த பேட்டியில், ரகுவரன் இறந்த போது, அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்டவிதம் என் மனதை மிகவும் காயப்படுத்தியது. என் மகன் ரிஷிக்கு ரகு இறந்த அதிர்ச்சியான செய்தியை கூறி பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது பத்திரிக்கையாளர்கள் யாரும் அங்கு இருக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்,அப்போது அனைத்து பத்திரிக்கையாளர்களும் சரி என்றனர்.

இப்படித்தான் நடந்து கொள்வீர்களா?
ஆனால், என் மகனை அழைத்து வரும் போது, அனைத்து பத்திரிக்கையாளர்களும் என் கூடவே உள்ளே வந்து விட்டார்கள் எனக்கு அது மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது, அனைவரிடத்திலும் கேட்டேன் இந்த மாதிரி நேரத்தில்கூட இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? எங்களுக்கு என்று ப்ரைவசி இல்லையா என்று கேட்டேன். இதனால், பல நாட்கள் நான் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமலே இருந்தேன்.

என் மகன் தயங்குகிறான்
இப்போதும் கூட என் மகன் ரிஷி என்கூட வெளியில் வருவதற்கு தயங்குகிறான். இந்தியாவில் எங்க போனாலும் போட்டோ எடுத்துபோட்டுவிடுகிறார்கள். எங்க போனாலும் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று என் மகன் புலம்புகிறான். இதனால், அவன் என் கூட வெளியில் வருவதை தவிர்த்துவிடுகிறான். பிரபலமாக இருப்பதால், பல நல்ல விஷயங்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications











