வரலாறு படைத்த ரோஜாவின் மகள்.. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் முதல் இந்திய மாணவியாக சாதனை
சென்னை: தமிழ் சினிமாவில் 'செம்பருத்தி' படத்தின் மூலம் அறிமுகமாகி, திரையுலகையே ஒரு காலத்தில் கட்டிப்போட்டவர் நடிகை ரோஜா. அதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே. செல்வமணி. திரையில் தொடங்கிய இவர்களது நட்பு, காதலாக மலர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
திரைத்துறையில் வெற்றிகரமான தம்பதிகளாக வலம் வரும் இவர்களுக்கு அன்ஷுமாலிகா (அனுஷ்) என்ற மகளும், கிருஷ்ணா லோகித் என்ற மகனும் உள்ளனர். ஆந்திர அரசியலில் பிஸியாக இருக்கும் ரோஜா, தனது குடும்ப நிகழ்வுகளையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இப்படி இருக்கையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராகவும் உள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு அன்னையர் தினம் ரோஜாவிற்கு மிகவும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

தனது மகள் அன்ஷுமாலிகா அமெரிக்காவின் புகழ்பெற்ற இந்தியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University Bloomington) கணினி அறிவியல் (Computer Science Honors) துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளதை ரோஜா பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.
ரோஜா எமோஷ்னல்: இது குறித்து ரோஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்த அன்னையர் தினம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. எனது மகள் அன்ஷுமாலிகா மிகச்சிறந்த மதிப்பெண்களுடன் (Highest Distinction) பட்டம் பெற்றுள்ளார். இது ஒரு தாயாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்."

இந்தியாவுக்கு பெருமை: வெறுமனே பட்டம் பெற்றதுடன் நின்றுவிடாமல், இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் ஒரு சாதனையை அன்ஷுமாலிகா நிகழ்த்தியுள்ளார். இந்தியானா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான 'ஹெர்மன் பி வெல்ஸ் டிஸ்டிங்குயிஷ்ட் சீனியர் அவார்டு' (Herman B Wells Distinguished Senior Award) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய மாணவி அன்ஷுமாலிகா தான். கல்வி மற்றும் தலைமைத்துவ பண்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
நெகிழ்ச்சி: கல்வியில் தனது மகள் சாதித்திருப்பது ஆர்.கே. செல்வமணி - ரோஜா தம்பதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா வாரிசுகள் பெரும்பாலும் திரையுலகை நோக்கி படையெடுக்கும் நிலையில், ரோஜாவின் மகள் கல்வியில் சர்வதேச அளவில் சாதித்திருப்பது பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications