The GOAT: எல்லா ஏரியாவுலயும் தளபதி கில்லிடா.. தி கோட் படத்தின் புதிய அப்டேட்டைக் கொடுத்த படக்குழு!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார் என்பது படக்குழு வெளியிட்ட போஸ்டர் மூலம் அனைவருக்கும் தெரியவந்தது. ஆனால் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகின்றார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி வருகின்றது. இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்களில் விஜய்யும் ஒருவர். இவர் படத்திற்கான கால்ஷீட் கிடைக்காதா என ஏங்கும் தயாரிப்பாளர்கள் இன்றைக்கும் காத்துக்கொண்டு உள்ளனர். விஜய் இன்றைக்கு ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடி சம்பளம் வாங்குகின்றார் எனக் கூறப்படுகின்றது. அப்படி இருக்கும்போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்குவதாக, தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய தினத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தி கோட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே உள்ளது. படத்தின் முதல் பாடல் விஜய் குரலில் வெளியாகி கலவையான் விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் விஜய்யின் 50வது பிறந்த நாளில் வெளியான இரண்டாவது பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது மட்டும் இல்லாமல், யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். விஜய் மற்றும் பவதாரிணி இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.
தி கோட்: இந்த படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை படக்குழு தரப்பில் இருந்தும் விஜயகாந்த் குடும்பத்தினர் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் ஒரு குத்து பாடலை தான் எழுதியுள்ளதாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையும், இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
திரையரங்க வெளியீட்டு உரிமம்: இந்நிலையில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை வெளிமாநிலங்களில் எந்ததெந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளது என்பதை படத்தின் தயாரிப்பாளாரான அர்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், " கர்நாடகாவில் தி கோட் படத்தினை வெளியிடும் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், கேரளாவில் படத்தினை வெளியிடும் உரிமையை கோகுலம் கோபாலன் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளர். மேலும் கர்நாடகா உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே தமிழ்நாட்டிலும் படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது" என அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஜய் படத்தில் சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தினர் வாங்காமல் உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்ரெண்டிங்கில் தி கோட்: தி கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடலும் இந்தியன் 2 படத்தின் காலண்டர் பாடலும் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. இதில் சின்ன சின்ன கண்கள் பாடலை இதுவரை யூடியூபில் மட்டும் 9.8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் காலண்டர் பாடலை கடந்த மூன்று தினங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த தகவல் தற்போது விஜய் மற்றும் கமல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. இந்த இரண்டு பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











