விரட்டும் கொரோனா.. ராஜமவுலியை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் தயாரிப்பாளருக்கும் கொரோனா..வீட்டில் சிகிச்சை
ஐதராபாத்: ராஜமவுலியை அடுத்து இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தின் தயாரிப்பாளருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்த தொற்றுக்குப் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமிதாப் பச்சன்
இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன், குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர்.

இயக்குனர் ராஜமவுலி
அபிஷேக் பச்சனுக்கு இன்னும் குணமாகவில்லை. அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். நடிகர் விஷாலும் அவர் தந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி உள்ளார். இயக்குனர் தேஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் தனய்யா
இந்நிலையில், ராஜமவுலி இயக்கும் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்) படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர். கடந்த ஒரு வாரமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

ஆர்.ஆர்.ஆர் படக்குழு
அப்போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ராஜமவுலி மற்றும் தயாரிப்பாளர் தனய்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இருக்கின்றனர்.

ஜூனியர் என்டிஆர்
இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோர் நடிக்கின்றனர். பாகுபலிக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











