ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆரையும் தூக்கிக் கொண்டாடும் மக்கள்.. தெறிக்கும் ஆர்.ஆர்.ஆர் போஸ்டர்!
சென்னை: உகாதி, தமிழ்ப் புத்தாண்டு என ஏகப்பட்ட புது வருட பண்டிகைகளை இந்தியா முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராதே ஷ்யாம் படத்தை தொடர்ந்து ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவும் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை மக்கள் தூக்கிக் கொண்டாடும் அட்டகாசமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜமெளலியின் பிரம்மாண்டம்
பாகுபலி படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமெளலி அடுத்ததாக பான் இந்தியா திரைப்படமாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக அந்த படம் உருவாகி வருகிறது.

சீதாராமராஜு
அல்லுரி சீதாராமராஜு எனும் சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் ராம்சரண் இந்த படத்தில் நடித்துள்ளார். மகதீரா படத்திற்கு பிறகு மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலும் ராம்சரண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கொமரம் பீம்
அல்லுரி சீதாராமராஜுவின் நண்பராகவும், எதிரிகளை வேட்டையாடும் வேங்கையாகவும் கொமரம் பீம் எனும் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர். இந்த படத்தில் நடித்துள்ளார். டோலிவுட் திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள இருவரும் இணைந்து மிரட்டவுள்ள இந்த படத்தின் ரிலீசுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதையாக ஆலியா
இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். சமீபத்தில் சேலை அணிந்து அப்படியே தென்னிந்திய பெண்ணாக இருக்கும் அவரது கதாபாத்திர போஸ்டர் வெளியாகி வைரலானது. பாலிவுட்டிலும் கங்குபாய் காத்தியாவாடி எனும் படத்திலும் லீடு ரோலில் மிரட்ட உள்ளார் ஆலியா.

யுகாதி ஸ்பெஷல்
இந்நிலையில், யுகாதி, தமிழ்ப்புத்தாண்டு, விஷு உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும் விதமாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை நூற்றுக் கணக்கான ஊர் மக்கள் தூக்கிக் கொண்டாடுவது போல பிரம்மாண்டமாக போஸ்டரே இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications