இயக்குநர் சங்க தேர்தல்.. யார் யாருக்கு என்ன பதவி தெரியுமா?.. இதோ முழு லிஸ்ட்
சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தேர்தல் நடந்தது. சென்ற முறை பதவிக்கு வந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த வருடம் தேர்தல் நடந்தது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடக்கும் இயக்குநர் சங்க தேர்தல் இம்முறை எந்தவித பரபரப்புமின்றி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டியிட்டனர். இந்தச் சூழலில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்கு என்று தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் செயலாற்றிவருகிறது. இதில் மொத்தம் 2,600 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 2,600 பேர்வரை உறுப்பினர்களாக இருந்தாலும் வாக்குரிமை பெற்றவர்களின் எண்ணிக்கையோ ஏறத்தாழ 2,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பு நடந்த இயக்குநர்கள் சங்க தேர்தலில் விக்ரமன் அணி, பாக்யராஜ் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன.

ஆர்.கே.செல்வமணி தலைவர்: அந்தத் தேர்தலில் விக்ரமன் அணியை சேர்ந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில் 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான இயக்குநர் சங்க தேர்தலுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மார்ச் மாதம் 16ஆம் தேதி அந்தத் தேர்தல் நடக்கும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் பேசிய ஆர்.கே.செல்வமணி, 'தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை' என்று அறிவித்திருந்தார்.
யார் யார் போட்டி: இயக்குநர் சங்கத்திற்கு ஒரு தலைவர், இரண்டு துணை தலைவர்கள், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மொத்தம் 27 பதவிகள் இருக்கின்றன. அந்த பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒன்றாம் தேதியோடு நிறைவடைந்தது. தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் விக்ரமன் - ஆர்.கே.செல்வமணியின் ஆதரவு பெற்ற புது வசந்தம் அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு யார் போட்டி: அதேபோல், செயலாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு, பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரண் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் துணைத்தலைவர் பதவிக்கு அரவிந்த்ராஜ், கே.எஸ்.ரவிக்குமாரும், இணை செயலாளர்கள் பதவிக்கு இயக்குநர்கள் சுந்தர்.சி, எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
போட்டியின்றி தேர்வு: இந்நிலையில் தமிழ்நாடு இயக்குநர் சங்க தலைவராக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் சின்னக்கவுண்டர், எஜமான், பொன்னுமணி, சிங்காரவேலன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த முறை இயக்குநர் சங்க செயலாளராக இருந்தார். அதேபோல் கடந்த முறை பொருளாளராக இருந்த பேரரசு இந்த முறை செயலாளராக பதவியேற்கவிருக்கிறார். இவர்கள் தவிர்த்து பொருளாளராக இயக்குநர் சரண், துணைத் தலைவர்களாக அரவிந்த்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார்; இணை செயலாளர்களாக சுந்தர்.சி, எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











