வாலி கதை சொன்னபோது அவர் என்ன செய்தார் தெரியுமா?.. அஜித் அப்பாவை நினைத்து எஸ்.ஜே. சூர்யா உருக்கம்
சென்னை: இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அஜித்தின் தந்தை குறித்து உருக்கத்துடன் நினைவுகூர்ந்திருக்கிறார்.
அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் வாலி. அந்தப் படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. வாலி படம்தான் சூர்யா இயக்குநராக அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலியில் அஜித்
ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் என வரிசையாக ஹிட் கொடுத்த அஜித்திற்கு சாக்லேட் பாய் என்ற முத்திரை விழ ஆரம்பித்திருந்த நேரம் அது. அந்த முத்திரை ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் சினிமாவில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க அது உதவாது என்பதை உணர்ந்த அஜித் வேறு வேறு ஜானரில் படம் செய்ய ஆசைப்பட்டார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் எஸ்.ஜே.சூர்யா வாலி கதையுடன் அஜித்தை அணுகினார்.

அஜித் கேரியரில் திருப்புமுனை
வளர்ந்துவரும் காலகட்டத்தில் வில்லனாக நடிக்க இளம் ஹீரோக்கள் யோசித்துக்கொண்டிருந்த சூழலில் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஹீரோவாகவும், வில்லனாகவும் வாலி படத்தில் தோன்றினார் அஜித். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளியாக தோன்றி தனது பார்வையாலும், உடல்மொழியாலும் நடித்து அசத்தியிருப்பார் அஜித். அந்தப் படம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

உச்சம் சென்ற அஜித்தின் கிராஃப்
வாலி படத்துக்கு பிறகு அஜித்தால் எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற பிம்பம் எழுந்தது. அதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகி தமிழின் தவிர்க்க முடியாது ஹீரோவாக உருவெடுத்துவிட்டார். இப்போது அவர் கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

அஜித்தின் தந்தை மரணம்
இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இருப்பினும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்றும், ட்விட்டர் வழியாகவும் அஜித்திற்கு தங்களை ஆறுதலை தெரிவித்தனர்.

எஸ்.ஜே.சூர்யாவின் ஆறுதல்
அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆழ்ந்த இரங்கல் ஐயா. வாலி திரைப்படத்தின் கதையை அஜித்திற்கு சொல்லியபோது ஐயாவும் அமர்ந்திருந்தார். நான் கதை சொல்லும் பாணியை அவர் வெகுவாக் அரசித்தார். எப்போதும் ஐயா மீது எனக்கு நேசம் உண்டு. அம்மா, அஜித், ஷாலினி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தை நேரில் சந்தித்த விஜய்
நடிகர் அஜித் குமாரின் தந்தை மரணமடைந்த செய்தியை கேட்டு நடிகர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று தனது ஆறுதலை தெரிவித்தார். அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் குரல் தழுதழுத்தபடி அஜித்திற்கு தனது ஆறுதலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











