S.J.Suryah - உங்களை எனக்கு யார்னே தெரியாதுங்க.. கிரிக்கெட் வீரரிடம் ஓபனாக பேசிய எஸ்.ஜே.சூர்யா
சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) பிரபல கிரிக்கெட் வீரரை சந்தித்தபோது அவரிடம் உங்களை யார் என்றே எனக்கு தெரியாது என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அதன் பிறகு குஷி படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகி அஜித், விஜய் ஆகியோரின் கரியரில் சிறந்த படங்களாக விளங்கிக்கொண்டிருக்கின்றன.

அப்போதே செய்த சூர்யா: தற்போதைய சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் கற்பனையான ஒரு உலகத்தில் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார்.
எல்லாம் கனவு: பல வருடங்கள் படங்கள் இயக்காமல் இருந்த அவர் தானே தயாரித்து இசை என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவுக்கு இடையே நடந்த மோதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. அப்படத்துக்காக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகராக கலக்கும் சூர்யா: இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா பெயர் எடுத்தாலும் அவரது முதல் ஆசை எப்படியாவது நடிகராகிவிட வேண்டும் என்பதுதான். அப்படி கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் பெரும் பாராட்டை கொடுத்தனர். நடிப்பில் அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான பொம்மை படம்வரை தொடர்கிறது. ராதாமோகன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான அப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் சூர்யாவின் நடிப்பு பாராட்டை பெற்றது.
கிரிக்கெட் வீரர் நடராஜன்: இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் தனக்கு சுத்தமாகவே தெரியாது என கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பார்க் ஹயாத் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் எதார்த்தமாக என்னை பார்த்தார். உடனே என்னிடம் வந்த அவர் என்னிடம் ஒரு ஹலோ சொன்னார். பிறகு நான், அவர், அவர் மனைவி, குழந்தை நான்கு பேரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
உங்களை யார்னே தெரியாது: புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பும்போது என்னுடைய உதவி இயக்குநர்கள் வந்து சார் நாங்களும் ஒன்னு எடுத்துக்குறோம் என என்னிடம் கேட்டார்கள். ஏண்டா இப்போ என நான் கேட்டேன். உடனே அவர்கள் உங்களுடன் இல்லை சார் அவருடன் என்றனர். பதறிய நான் யார் அவரு என்று கேட்டேன்.
சார் அவர் கிரிக்கெட் ப்ளேயர் என்று கூறினார்கள். அதனையடுத்து நான் நடராஜனிடம் சென்று அய்யோ சார் உங்களை யார்னு எனக்கு தெரியலனு சொல்லி உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டு நான் இன்னொரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











