twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனித்து ஒலித்த பெண்குரல் - எஸ். ஜானகி!

    By Shankar
    |

    Recommended Video

    அறுபதுகளிலிருந்து எண்பதுகள் வரை இசையில் ஜானகி தான் அரசி..!!

    - கவிஞர் மகுடேசுவரன்

    நம்மை மயக்கிய திரைப்பாடல்களில் ஆண்குரல் தரப்பில் பங்கேற்றவர்களுக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தியாகராஜ பாகவதரிலிருந்து டி. எம். சௌந்தரராஜன் வழியாக ஜேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் என்று நீண்டு அருண்மொழி, ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் எனப் பெரிதாய்த் தொடர்கிறது. ஆனால், நம் நினைவைத் தாலாட்டுகிற திரைப்பாடல்களின் பெண்குரல்கள் இரண்டே இரண்டு பெரும்பிரிவுகளாக நிற்கின்றன. ஒன்று பி. சுசீலா. இன்னொன்று எஸ். ஜானகி. வாணி ஜெயராம், சித்ரா என்று நீட்ட முடியும் என்றாலும் சுசீலா அம்மையும் ஜானகியம்மையும் நம்மைப் பீடித்த பீடிப்பை வேறு தரத்தில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.

    S Janaki, the nightigale of Tamil palyback singing

    தமிழ்த் திரைப்பாடல்களின்படி ஒரேயொரு ஆண்குரலைச் சொல் என்றால் டி. எம். சௌந்தரராஜனையும் ஒரேயொரு பெண்குரலைச் சொல் என்றால் எஸ். ஜானகியையும் சொல்வேன். ஆண்குரலுக்குப் பாலசுப்பிரமணியத்தையோ பெண்குரலுக்குச் சுசீலாவையோ சொல்ல இயலாதா என்று கேட்பீர்கள். சொல்லலாம்தான். நான்கு வரிகளைக் கேட்டாலே என் நினைவுகளின் வறட்சியகன்று பழைமைக்குள் குடியேறும்படி மனத்தைக் கொள்ளையடித்த குரல் ஜானகியம்மாவுக்கே உரியது. சௌந்தரராஜனும் ஜானகியும் பாடிய இணைப்பாக்கள் அளவிற் குறைந்தவைதாம். அவை சிலவே என்றாலும் திரையிசையின் இணைப்பாடல் இலக்கணத்திற்கு முதற்சான்றுகளாய்க் கருதத்தக்கவை.

    S Janaki, the nightigale of Tamil palyback singing

    எடுத்துக்காட்டாக, இவ்விரண்டு பாடல்களைக் குறிப்பிடுவேன். குங்குமம் திரைப்படத்தில் வரும் 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா...' என்ற பாடல் ஒன்று. பூக்காரி திரைப்படத்தில் வரும் 'காதலின் பொன்வீதியில் நான் ஒரு பண்பாடினேன்...' என்ற பாடல் மற்றொன்று. இவ்விரண்டு பாடல்களின் ஆண் பெண் குரல் கலவைதான் ஓர் இணைப்பாடலில் அமைந்த மிகச்சிறந்த கலவை. ஆனால், ஏனோ இவ்விருவரும் மிகுதியான இணைப்பாடல்களைப் பாடவில்லை. சௌந்தரராஜன் மிகுதியாய்க் கேட்கப்பட்ட காலங்களில் ஜானகிக்கு முதலிடம் இருக்கவில்லை. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவருடைய இசையில் ஜானகியின் இடம் முதன்மையானது. அந்நேரத்தில் சௌந்தரராஜனின் பேரலை தணியத் தொடங்கியிருந்தது. இருவரும் தனித்தனியான இசைப்போக்குகள் நிலவிய காலகட்டங்களில் எழுந்து நின்றமையால்தான் மிகுதியான பாடல்களைச் சேர்ந்து பாட முடியவில்லை என்று நினைக்கிறேன்.

    S Janaki, the nightigale of Tamil palyback singing

    'சின்னஞ்சிறிய வண்ணப் பறவையில்' இழையும் ஜானகியம்மாவின் குரல் தொலைவிலிருந்து ஒலிக்கும் சிறுமியின் குரலை ஒத்திருந்தது. மிகவும் உயர்ந்த தளத்தில் அது எழும்பியிருப்பினும் தொலைவிலிருந்து கேட்பதைப்போல் உணர வாய்த்தது. ஒரு பாடகரின் குரல் பாடல் பதிவுக்கருவியைப் பொறுத்து இறுதியாய் வேறு வகையில் வடிவெடுக்கிறது. அது ஒத்துப்போகும்போதுதான் ஒரு பாடகரின் பதிவுப்பாடல்கள் விரும்பப்படுகின்றன. அந்தக் காலத்தில் ஒலிப்பதிவுக் கருவியில் பாடகரின் குரல் இழைவுகள் நுட்பமாய்ப் பதிவாகும்படி கணீரென்று ஒலிக்கப் பாடவேண்டும். அவ்வாறு ஒலிக்கையில் மென்மை தவறுவதற்கு இடமிருக்கிறது. வெண்கலத்தைத் தட்டியது போன்ற கணீரென்ற ஒலிப்பு வேண்டும். அதனாற்றான் பாகவதரும் கிட்டப்பாவும் சௌந்தரராஜனும் கோவிந்தராஜனும் புகழ்பெற்றார்கள்.

    S Janaki, the nightigale of Tamil palyback singing

    குரலின் வெண்கலத்தன்மை பெண் பாடகர்க்குத் தேவையில்லை. ஆனால், பாடற்பதிவுக் கருவியில் நம் குரல் இசையிழைவுகளோடு தேர்ச்சியாய்ப் பதிவாவதற்கு மென்மையில் பிறழாமல் உயர்த்தி ஒலிக்க வேண்டும். சுசீலாவின் மென்மையில் குறைவில்லாமல் இருந்ததால் அக்காலத்தில் அவருடைய பாடல்கள் பெரிதும் விரும்பப்பட்டன. ஒரு பாடகரின் வெற்றி தோல்வி ஒலிப்பதிவுக் கருவியால் ஆவதா என்ற ஐயம் ஏற்படலாம். ஒரு பாடல் பதிவில் இலங்கும் தொழில்நுட்பத் தரவுகளை அறிந்தால் இது முழுக்க முழுக்க 'அறிவியல் தன்மையறிந்து மெருகேற்றப்படும் கலை' என்பதை அறியலாம். தனித்தனி வரியாகப் பாடி ஒரே மூச்சில் பாடியதுபோல் கோக்கப்பட்ட 'மண்ணில் இந்தக் காதலன்றி' பாடலைக் கேட்டீர்களானால் இதன் அறிவியல் துணை விளங்கும். ஒலிப்பதிவுக் கருவியால் 'கமழ்ந்தது' என்ற சொல்லைப் பதிந்துகொள்ள முடியவில்லை என்பதால்தான் பாரதிதாசன் மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்தைவிட்டு வெளியேறினார் என்று முன்பே கூறியிருக்கிறேன். அதனால்தான் செவ்வியல் இசைக் கலைஞர்கள் திரைப்பட ஒலிப்பதிவுகளின் வழியே புகழ்பெறும் பாடற் கலைஞர்களை எளிமையாகத்தான் நோக்குகிறார்கள்.

    பாடல் என்பது நேரடியாக நிகழ்த்தப்பட வேண்டியது. மணிக்கணக்கில் கச்சேரி செய்கின்றவரும், ஒரு பாடலின் ஒரு வரியைத் தனியாகப் பாடி அதை ஒலிப்பதிவு நுட்பத்தின்படி கோப்பதால் புகழ்பெறுகின்ற திரைப்பாடகரும் ஒரே வகைப்பாட்டினர் அல்லர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால், தொண்ணூறுகளுக்கு முந்திய நம் பாடகர்கள் ஒரே எடுப்பில் பாடி முடிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். அந்த மேன்மையைத்தான் பழைய பாடல்களில் உணர்கிறோம். அதனால்தான் அவற்றை இன்றும் தொடர்ந்து விரும்பிக் கேட்கிறோம். நிற்க.

    'காதலின் பொன்வீதியில்...' பாடல் உணர்த்தும் ஒரு கனவுலகத்தை ஜானகியில் குரலால் அன்றி வேற்றொரு குரலால் நாம் அடைந்திருக்கவே முடியாது. பாடல் தொடங்குவதற்கு முன்பெழும் ஓர் ஆலாபனையிலேயே நாம் சொக்கி விழுகிறோம். இளையராஜாவின் முதற்பாடலில் 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே...' என்று தொடங்கிய ஜானகியின் நெடும்பயணம் அடுத்த இருபதாண்டுகளுக்கு ஓயவில்லை. இசைப்பாடலில் அவர் காட்டிய இழைவுகள் ஒலிப்பதிவில் துல்லியமாய் வெளிப்பட்டன. அறுபதுகளில் இருந்த பாடல் பதிவு நுட்பங்கள் மேம்படத் தொடங்கின. எழுபதுகளின் இறுதியில் 'ப்ரியா' போன்ற படங்களில் இருமுனைய ஒலிப்பு (ஸ்டீரியோபோனிக்) நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இப்போது உரக்கக் கத்திப் பாடுவோரின் குரல் ஒலிப்பதிவுக் கருவிக்கு இல்லை. மேல் கீழ் மட்டங்களில் ஏற்றி இறக்கிப் பாடவேண்டும். அவற்றைக் கச்சிதமாகப் பதிந்தெடுக்கும் கருவிகள் வந்துவிட்டன. பழைய பாடகர்கள் கைவிடப்பட்டனர்.

    1957இல் அறிமுகமாகியபின் பொறுமையாகக் காத்திருந்த ஜானகிக்கு இருபதாண்டுகள் கழித்து மிகப்பெரிய திரைப்படப் போக்கின் தனிப்பெண்மைக் குரலாக வாய்க்கும் பேறு கிடைத்தது. இன்னும் ஆயிரமாண்டுகள் ஆனாலும் தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த பாடல்கள் என்று அறுபதுகளிலிருந்து எண்பதுகள் முடியும்வரையிலான காலகட்டத்துப் பாடல்களே அறியப்படும். அப்போது ஜானகியம்மாவின் சாதனையை வியந்து குறிப்பிடுவார்கள்.

    English summary
    Poet Magudeswaran's article on the dominance and sweetness of playback singer S Janaki in Tamil cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X