S. Janaki: நினைத்து நினைத்து அழும் டி. ராஜேந்தர்.. வயசாகி மறைந்தாலும் துக்கம் துக்கம் தானே!
சென்னை: இந்திய திரை இசையின் மூத்த பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி அம்மா ஜூலை 11ஆம் தேதி வயது மூப்பு மற்றும் மரடைப்பால் காலமானார். இவரது மறைவுச் செய்தி அனைவருக்கும் பேரதிர்ச்சி தான். காரணம் இந்திய திரை இசையின் மூலம் மக்களின் துயர் துடைத்த குரல்களுக்குச் சொந்தமானவர் ஜானகி அம்மா. 88 வயதில் மறைந்துவிட்டார், வயது மூப்பாகி தான் மறைந்துள்ளார் என்று பலரும் சொன்னாலும் அப்படிச் சொல்பவர்கள் குரலில் ஏக்கமும் துக்கமும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
சினிமாக்காரர்கள் வெகு விரைவில் மக்களின் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போகிறார்கள். அதில் நடிகர்களும் நடிகைகளும் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆனாலும், அவர்களுக்கு ஹேட்டர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பாடகர்களுக்கு ஹேட்டர்ஸ் என்ற வார்த்தையே கிடையாது.
காரணம், பாடகர்கள் தாலாட்டு பாடி உள்ளர்கள், குழந்தைப் பருவத்தை பாடி உள்ளார்கள், நல்லதை கற்கச் சொல்லி, காதலை நேர்த்தியாக சொல்லி, குடும்பத்தை பேணச் சொல்லி, நாட்டை காக்கச் சொல்லி, துயரத்தில் துயர் நிக்கி, இன்பத்தை அழகாக்கி விடுகிறார்கள். இப்படியானவர்களை யார் வெறுப்பார்கள். இப்படிப்பட்ட பாடகியான ஜானகி அம்மா 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்கள் பாடி உள்ளார். இவரது மறைவுக்கு தனது மனதில் இருந்த துக்கத்தை எல்லாம் நினைத்து நினைத்து இரங்கல் மடலை எழுதி உள்ளார் டி. ராஜேந்திரன்.

டி.ராஜேந்திரன்: அவர் தனது இரங்கல் பதிவில், " தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, நான்கு முறை தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில அரசின் விருதுகளையும் வாங்கிக் குவித்த தென்றலிசைப் பாடகி, தேன்குரல் தேவகி எஸ்.ஜானகி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகின்றது.
சிம்புவுக்கு: 'நெஞ்சம் பாடும் புதிய ராகம், தாளம் உன்னைத் தேடுதே' என்று நினைவில் நின்ற, நெஞ்சில் ஒரு ராகம், தந்து விட்டாரே நீங்காத சோகம். 'வசந்தம் பாடி வைகை ஓடிவர இளமைகூடி வர இனிமை தேடி வர' என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர், பாட்டுக்கு அமுதூட்டியவர். சந்தனக் காற்றாம், சங்கதி ஊற்றாம், சங்கீதக் குயிலாம் என்னுடைய 'சம்சாரம் சங்கீதம்' படத்திலே என் மகன் சிலம்பரசனுக்காக 'ஐயம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்' என்று பாட்டு படித்தாயே, முத்திரை பதித்தாயே, இன்று நீங்காத நித்திரைக்குச் சென்று விட்டாயே என்று என்னுடைய நெஞ்சம் நீங்காத சோகத்தைக் கொண்டு விட்டது.

ஆத்மா சாந்தியடையட்டும்: அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும் இந்திய கலை உலகத்தாருக்கும் ரசிகர்களுக்கும் நேயர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.இப்படிக்கு, திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த இரங்கல் குறிப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications