Karuppu: அசால்ட் போஸ்ட்டா? கருப்பு தயாரிப்பாளரை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. இசையமைப்பாளராக முதன் முதலில் சாய் அபயங்கர் கமிட் ஆன படம் இதுதான். படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு, ப்ரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றது. படத்தின் புக்கிங்கும் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இப்படி இருக்கையில் என்ன நடந்தாலும் கருப்பன் எல்லா தடைகளையும் தகர்த்து எறிவான், படம் நாளை வெளியாகும் என்று நம்புவோம் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மே 13ஆம் தேதி இரவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இது இப்படி இருக்க, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு நள்ளிரவு 1.17 மணிக்கு படத்தின் காலை 9 மணி காட்சிகள் வெளியாகது என்றும், அவை ரத்து செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டு, ரசிகர்களிடத்தில் மன்னிப்பும் கேட்டார்.

தயாரிப்பாளரின் இந்த போஸ்ட்க்கு ரசிகர்கள் அவரை ரவுண்டு கட்டி விளாசி வருகிறார்கள். அதாவது, ரசிகர் ஒருவர், இப்படி நடு ராத்திரியில் எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலைச் சொல்கிறீர்களே, எக்ஸ் செயலி இல்லாத, தியேட்டருக்கு சென்று முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு யார் இந்தத் தகவலைக் கூறுவார்கள்? அந்த ரசிகர் ஏமாந்து போக மாட்டாரா? இப்படி பொறுப்பற்ற முறையில் தான் ஒன்றைத் தெரிவிப்பீர்களா? எங்களுக்கு முறையான தெளிவான காரணம் வேண்டும். நாங்கள் கொடுக்கும் நேரத்திற்கும் பணத்திற்குமாவது உண்மையாக நடந்து கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதுவரைக்கும் தோல்வி: மற்றொருவர், " உங்களை (S R பிரபு) விட்டுட்டு வெளியே வந்து எப்போது மற்றவர்களுடன் இணைந்து சூர்யா படம் பண்ணுகிறாரோ அப்போதுதான் அவருக்கு படம் ஓடும், அதுவரைக்கும் தோல்விதான் என்றும், மற்றொருவர், உங்களுக்கு பிரச்னை இருக்கலாம் இல்லாமல் போகலாம் அதற்காக எங்களது உணர்வுகளில் விளையாடாதீர்கள். அடுத்த காட்சியாவது இருக்கிறதா? இல்லை படம் வெளியாகிறதா இல்லையா அதையாவது தெளிவாகச் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏமாற்றாதீர்கள்: திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரோ," ஐயா இன்னைக்கு படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? சென்னை, கோவைனு பல மாவட்டங்களில் இருந்து படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க திருநெல்வேலிக்கு வந்திருக்காங்க. அவங்க எல்லாரும் ஏமாந்து போக மாட்டாங்களா? அவர்களுக்கு எல்லாம் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் என்னனு பதில் சொல்லுவார்? தயவு செய்து தெளிவாக சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
எப்படித் தெரிகிறது?: மற்றொருவரோ, பல ரசிகர்கள் காலை 9 மணி காட்சிக்காக அதிகாலையிலேயே எழுந்து படம் பார்க்க ஆசையாக தியேட்டருக்கு வருகிறார்கள், எங்களை எல்லாம் பார்த்தால் எப்படித் தெரிகிறது உங்களுக்கு என்று மிகவும் கோபத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சில ரசிகர்கள் தங்களின் ஏமாற்றத்தை, கோபத்தை மிகவும் காத்திரமான முறையில் பகிர்ந்து வருகிறார்கள். தொடர்து எஸ்.ஆர். பிரபுவை மிகவும் காத்திரமாக விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications