'புட்ட பொம்மா' மாதிரி ஒரு பாட்டு போடுங்க.. சிம்பு படத்துக்கு இசை அமைக்கும் எஸ்.எஸ். தமன்!
சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு இசை அமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சுசீந்திரன். இது குறுகிய கால படம் என்று கூறப்படுகிறது.
கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் சுசீந்திரன்
இதன் ஷூட்டிங், திண்டுக்கல்லில் தொடங்கி நடந்து வருகிறது. டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்க, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சுசீந்திரன் தயாரித்து இயக்குகிறார். இதன் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு இன்று கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது. 30 நாட்களில் படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

நிதி அகர்வால்
இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இதில் சிம்பு ஜோடியாக, நிதி அகர்வாலை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் பூமி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.

இசை அமைப்பாளர் தமன்
இந்நிலையில், இந்தப் படத்தில் இசை அமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, சிம்புவின் ஒஸ்தி, வாலு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கிலும் இசை அமைத்து வரும் தமன், அல்லு அர்ஜூனின் அலா வைகுந்தபுரம்லோ படத்துக்கு கடைசியாக இசை அமைத்திருந்தார்.

புட்ட பொம்மா
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புட்ட பொம்மா பாடல், சூப்பர் ஹிட்டானது. யுடியூப்பிலும் சாதனை படைத்தது. தெலுங்கில் இப்போது, பவன் கல்யாண் நடிக்கும் வக்கீல் சாப், ரவி தேஜாவின் கிராக், நானியின் டக் ஜகதீஷ் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் தமன். சிம்பு படத்துக்கும் புட்டபொம்மா மாதிரி ஒரு பாடலை போடுங்க என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாநாடு ஷூட்டிங்
நடிகர் சிம்பு, மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கின்றனர். கொரோனாவால் தடைபட்டுள்ள இதன் படப்பிடிப்பு, நவம்பரில் மீண்டும் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குள் இந்தப் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











