பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு.. பிரபல நடிகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை
சென்னை: பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பதிவிட்டார். அது பெரும் பரபரப்பை கிளப்பியது. அவரது வீட்டுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் போராட்டமும் நடத்தினார்கள். இந்தச் சூழலில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.சேகர். முதலில் தனது கலை பயணத்தை நாடகத்திலிருந்து ஆரம்பித்து மெல்ல மெல்ல சினிமாவுக்குள் வந்தார். அந்தவகையில் பல படங்களில் நடித்திருக்கிறார் அவர். வறுமையின் நிறம் சிவப்பு, ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் அவர். காலங்கள் செல்ல செல்ல அவருக்கு மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. அவ்வப்போது நடித்துவந்த அவர் ஒருகட்டத்தில் நடிப்பதே இல்லை.

பாஜக அரசியல்: நடிப்பிலிருந்து ஒதுங்கிய அவர் அரசியலில் கவனம் செலுத்தினார். பல வருடங்களாகவே அவர் அரசியலில் இருந்தாலும் பாஜகவில் இணைந்ததிலிருந்து சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்துவந்தார். அதில் ஒன்றுதான் பெண் பத்திரிகையாளர் சர்ச்சை. கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் அவர். அது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மன்னிப்பு கேட்ட சேகர்: அதனையடுத்து எஸ்.வி. சேகர் மீது வழக்கும் தொடரப்பட்டது. சூழல் இப்படி இருக்க தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்; பெண் பத்திரிகையாளர் குறித்து அப்படி பதிவு செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். ஆனாலும் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என்பது பத்திரிகையாளர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றம்: அதன்படி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது; எம்.எல்.ஏ, எம்.பி மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் சிறையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன் என்று கூறிவிட்டு சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார் எஸ்.வி.சேகர். இந்நிலையில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று கூறி அந்தத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம.


Click it and Unblock the Notifications











