பெயரை வைத்து ஒருவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைத்தனம்! - எஸ் ஏ சந்திரசேகர்
சென்னை: பெயரை வைத்து ஒருவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைத்தனம் என நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.
மெர்சல் படப் பிரச்சினையில் கருத்து கூறி வரும் பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா, தொடர்ந்து விஜய்யை ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டு வருகிறார்.

நேற்று விஜய்யின் அடையாள அட்டை, லெட்டர் பேடு போன்றவற்றை வெளியிட்டு, அதில் ஜோசப் விஜய் என்று அச்சடிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதாவது 'விஜய் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இந்துத்துவ மோடியைப் பிடிக்காது. அதனால்தான் மோடியின் திட்டங்களை மெர்சல் படத்தில் குறை சொல்லியிருக்கிறார்' என்பது எச் ராஜா கூறி வரும் கருத்து.
இதற்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "விஜய்யை பள்ளியில் சேர்த்த போது 'பெயர் - ஜோசப் விஜய். தந்தை பெயர் - சந்திரசேகர். தேசம் - இந்தியா. மதம் - இந்தியன், ஜாதி - இந்தியன்' என்றுதான் போட்டேன். இன்றுவரை விஜய் ஒரு மனிதனாக இருக்கிறார்.
பெயரை வைத்து ஒருவரது மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் இந்த மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications











