விஜய்யின் தவெக மாநாடு பற்றி அவரிடம் கேளுங்கள்.. நழுவிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. மீண்டும் பிரச்னையா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். அக்டோபர் 27ஆம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இப்போதே விஜய்யின் ரசிகர்கள் தயாராகியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தவெக மாநாடு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நழுவி சென்றார் அவர்.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக படம் மெகா ஹிட்டடித்துவிட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக 500 கோடி ரூபாய்வரை படம் வசூலித்துவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் விமர்சன ரீதியாக தொடர்ச்சியாக விஜய் நடித்த படங்கள் அடி வாங்கிவருவதால் ரசிகர்கள் கவலையடைந்திருக்கின்றனர்.

கடைசி படம்: சூழல் இப்படி இருக்க விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கும் அந்தப் படத்தை கேவிஎன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில்தான் நடந்தது. கடைசி படத்தை தரமாக கொடுத்துவிட வேண்டுமென்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம்: முன்னதாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அந்த ஆரூடத்தை பலிக்கவைக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சியின் பாடலும், கொடியும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பாடலாசிரியர் விவேக் தவெக கட்சியின் பாடலை எழுத; தமன் இசையமைத்திருந்தார்.
முதல் மாநாடு: தவெகவுக்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. எனவே 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அரசியல் கட்சியாக போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. அதனையொட்டி வேலைகளை கட்சியினர் இப்போதே தொடங்கியிருக்கிறார்கள். மேலும் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்ந்த பிரச்னை: இதற்கிடையே விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சில காலம் கருத்து மோதல் எழுந்தது. ஆனால் சமீபகாலமாக அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்துவிட்டார்கள். தவெக கொடி அறிமுக விழாவில்கூட எஸ்.ஏ.சியும், ஷோபாவும் கலந்துகொண்டு விஜய்யை வாழ்த்தினார்கள். இதன் காரணமாக அவர்களுக்குள் இருந்த பிரச்னை முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
மீண்டும் பிரச்னை?: இந்நிலையில் விஜய்க்கும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மீண்டும் பிரச்னை வந்துவிட்டதோ என்ற பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதாவது சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது அவரிடம் விஜய் கட்சியின் மாநாடு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சி, 'மாநாடு எடுத்தவர் இவர்தான். எனவே இவரிடம் கேளுங்கள்' என்று அருகிலிருந்த் வெங்கட் பிரபுவை கை காட்டிவிட்டு நழுவிவிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள், என்ன எஸ்.ஏ.சி இப்படி நழுவிவிட்டார். இவர் சொல்வதை பார்த்தால் மாநாட்டுக்கு வருவது சந்தேகம்தானோ; ஒருவேளை மீண்டும் விஜய்ய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் பிரச்னை ஆரம்பித்துவிட்டதோ என்று கேள்வியை முன்வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











