அப்பாவுடன் நிறைய பேசியிருக்கலாம்.. அவர் ஒத்துக்கொள்ளவில்லை.. சச்சின் பட இயக்குநர் எமோஷனல் டாக்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். அவர் இயக்கிய முள்ளும் மலரும், ஜானி, நண்டு, மெட்டி என ஏகப்பட்ட படங்கள் கோலிவுட்டின் பொக்கிஷங்களாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. மனித உணர்வுகளை எதார்த்தத்தோடு திரையில் பதிவு செய்த மிக சில இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர். இயக்குநராவதற்கு முன்பே தங்கப்பதக்கம் படத்துக்கு கதை எழுதியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொன்னியின் செல்வன் நாவலையும் இவரை இயக்குவதற்கு எம்ஜிஆர் பணித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. அவரது மகன் ஜான் மகேந்திரனும் ஒரு இயக்குநர்தான். விஜய்யை வைத்து சச்சின் படத்தை இயக்கியிருக்கிறார். இப்போது நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
கோலிவுட்டில் மகேந்திரன் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. காரைக்குடியில் படித்துக்கொண்டிருந்த அவரை ஒரு விழாவில் எம்ஜிஆர் பாராட்டியதைத் தொடர்ந்து சினிமாவில் கதை, வசனங்கள் எழுத ஆரம்பித்தார். அப்படி அவர் தங்கப்பதக்கம் உள்ளிட்ட படங்களுக்கு கதையும் வசனத்தையும் எழுதினார். முக்கியமாக சிவாஜி எப்போதுமே ஓவர் ஆக்டிங் என்று ஒருதரப்பினர் சொல்வதுண்டு. ஆனால் அதனை தங்கப்பதக்கம் படத்தில் மாற்றி காட்டினார் சிவாஜி. அதற்கு முழு காரணமும் மகேந்திரன்தான். இப்படி அறிமுகமான சில காலத்திலேயே எதார்த்தமான படைப்பாளி என்கிற பெயரை மகேந்திரன் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவருக்கு இயக்குநராகும் வாய்ப்பும் விரைவிலேயே கிடைத்ததால் இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

இயக்குநர் மகேந்திரன்: அதன்படி ரஜினிகாந்த், ஷோபா உள்ளிட்டோரை வைத்து முள்ளும் - மலரும் திரைப்படத்தை 1978ஆம் ஆண்டு இயக்கினார் அவர். அண்ணன் - தங்கை பாசம், தான்தான் என்ற அகம்பாவம் பிடித்த கேரக்டர் கொண்ட ஒரு ஆள் ஆகியவைகளை மைய சரடாக வைத்துக்கொண்டு திரைக்கதையை உருவாக்கியிருந்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. குறிப்பாக ரஜினிகாந்த்துக்குள் மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை அந்தப் படம் வெளிச்சம் போட்டு காண்பித்தது. ரஜினியின் கரியர் பெஸ்ட் என்று எடுத்துக்கொண்டால் முள்ளும் - மலரும் திரைப்படம் டாப் 3க்குள் இருக்கும். அதேபோல் தனக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரன்தான் என்று ரஜினியும் கே. பாலசந்தரிடமே கூறியிருக்கிறார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
நடிகராகவும் கலக்கிய மகேந்திரன்: முள்ளும் - மலரும் படத்தை அடுத்து உதிரிப்பூக்கள், மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை என ஏராளமான படங்களை இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் இன்றுவரை தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. உதிரிப்பூக்கள் படம் போல் எல்லாம் இன்னொரு படத்தை யாராலும் எடுக்க முடியாது என்பது பெரும்பாலான சினிமா ரசிகர்களின் கருத்து. வயோதிகம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அவர் நடிகராகவும் மாறினார். அதன்படி விஜய் நடித்த தெறி, ரஜினிகாந்த் நடித்த பேட்ட படங்களில் தனது சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். மகேந்திரனுக்கு ஜான் மகேந்திரன் என்ற மகனும் இருக்கிறார்.

மகனும் இயக்குநர்தான்: தந்தை போலவே அவரது மகன் ஜானும் இயக்குநர்தான். விஜய்யை வைத்து சச்சின் படத்தை இயக்கி அவர் இயக்குநராக அறிமுகமானார். விஜய்யுடன் ரகுவரன், வடிவேலு, சந்தானம், ஜெனிலியா என பலர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் கரியரில் சச்சின் படத்துக்கும் முக்கியமான இடம் உண்டு. படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். சமீபத்தில் அந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதன்முறை ரிலீஸானபோது ரசிகர்கள் எப்படி விஜய்யையும், படத்தையும் கொண்டாடினார்களோ ரீ ரிலீஸிலும் அதேபோல் கொண்டாடினார்கள். இந்நிலையில் ஜான் மகேந்திரன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
ஜான் மகேந்திரன் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "எனது தந்தை தன்னை சுற்றியிருப்பவர்களை எப்போதுமே உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர். ஒருவரின் உடல்மொழிகூட கதையை நமக்கு தரும் என்று சொல்வார். எங்கள் வீட்டின் தோட்டக்காரர் ஒருவரை ஒருமுறை அப்பா உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருந்தார். அவர் வெளிப்படுத்திய உடல்மொழியை ஒரு டைரியில் தேதியை குறிப்பிட்டு; அவர் எப்படியெல்லாம் பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தினாரோ அதை அப்படியே எழுதி வைத்துக்கொண்டார். அதற்கு பிறகு சில நாட்களில் அந்த தோட்டக்காரரின் உடல்மொழியை வைத்து ஒரு கதையை உருவாக்கிவிட்டார். அது எனக்கு அவ்வளவு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.
அப்போதும் சினிமாதான்: அப்பாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவரை பார்க்க உறவினர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆனால் அவரோ அந்த சமயத்திலும் நெட்ஃப்ளிக்ஸில் ஒரு வெப் சீரிஸ் பார்த்துக்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி வந்திருக்கும் உறவினர்களிடம்கூட பெரிதாக பேசவில்லை. ஆனால் என்னை கூப்பிட்டு, 'முதல் ஷாட்டிலிருந்தே கதையை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வேன் அல்லவா?. அதேபோல்தான் இந்த வெப் சீரிஸிலும் செய்திருக்கிறார்கள். அதனை நீயும் பார்க்க வேண்டும் என்று கூறினார். அந்த வெப் சீரிஸ் ஒவ்வொரு சீசனிலும் 70 எபிசோடுகளை கொண்டிருந்தது. மரண படுக்கையிலும் சினிமாவா என்று வியந்து போனேன்.
ரீமேக்குக்கு மறுத்துவிட்டார்: அப்பாவிடம் பலர் வந்து உங்களின் திரைப்படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யலாமே என்று கேட்டார்கள். ஆனால் அப்பா அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. நாங்களும் அவருடன் பலமுறை இதுகுறித்து சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் தான் எடுத்த முடிவில் அவர் உறுதியாக இருந்தார். பாரதிராஜாவின் படங்கள் எல்லாம் மற்ற மொழிகளில் ரீமேக்காகும் போது உங்கள் படங்கள் ஆனால் என்ன தவறு என்றெல்லாம் கேட்டு பார்த்தோம். இருப்பினும் அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை. எப்போதுமே எனக்கும் அவருக்கும் ஒரு முரண்பாடு இருக்கும்தான். ஆனால் இரண்டு நாட்கள் கழித்துதான் அப்பா எடுத்த நிலைதான் சரியானது என்று புரியவரும்.
அப்பாவுடன் இன்னும் நிறைய பேசியிருக்க வேண்டும்: அப்பா இறந்த சமயத்தில் நான் கொடுத்திருந்த ஒரு நேர்காணலில் ரொம்பவே எமோஷனலாகிவிட்டேன். அவர் உயிரோடு இருந்தபோது சமூக வலைதளங்களில் அதிகம் நேரம் செலவழித்தேன். அப்பாவோடு அதிகம் ஸ்பெண்ட் செய்யவில்லை. அவருடன் இன்னும் நிறைய பேசியிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.எனவே இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். மொபைல் போனை தூரமாக வைத்துவிட்டு உறவினர்களிடம் பேச வேண்ட்ம். அதைத்தான் அந்தப் பேட்டியிலும் சொல்லியிருந்தேன். அந்தப் பேட்டிக்கு பிறகு அதேபோல் ஒரு பேட்டி வேண்டும் என்று கேட்டு வந்தார்கள். ஆனால் நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். ஒருமுறை கொடுத்த பேட்டி போலவே இன்னொருமுறை கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் ஒரு படத்தை ஒருமுறை எடுத்த பிறகு அதனை எப்படி ரீமேக் செய்ய முடியும் என்பதை புரிந்துகொண்டேன். அப்போதுதான் ரீமேக்குக்கு அப்பா ஏன் ஒத்துக்கொள்ளவில்லை என்பது உணர்ந்துகொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











