பாலிவுட் வில்லன் “சதாசிவ அமராபுர்கர்” மரணம்- நாளை இறுதிச்சடங்கு!
மும்பை: இந்தி திரைப்பட உலகமான பாலிவுட்டில் வில்லனாக கலக்கிய நடிகர் சதாசிவ அமராபுர்கர் இன்று காலமானார்.
64 வயதான அவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மும்பையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று கோகிலம் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நடிப்பால் உள்ளம் கவர்ந்தவர்:
பாலிவுட் உலகில் மிஸ்டர் இந்தியா, அர்த் சத்யா, இயக்குநர் பாக்கியராஜ் இயக்கிய ஆக்ரி ராஸ்தா (ஒரு கைதியின் டைரி படத்தின் ரீமேக்) போன்ற படங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் இவர்.

திருநங்கையாக அசத்தல் வேடம்:
சஞ்சய் தத் நடித்த சடக் படத்தில் கதாநாயகியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மகாராணி என்ற திருநங்கையாக வில்லன் நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளியிட்டார்.

இரண்டு விருதுகள்:
தன்னுடைய சிறப்பான நடிப்பிற்காக இரண்டு "பிலிம் பேர்" விருதுகளை பெற்றுள்ளார் அமராபுர்கர். 1984 ஆம் ஆண்டு "அர்த் சத்யா" படத்திற்காகவும், 1991 ஆம் ஆண்டு "சடக்" திரைப்படத்திற்காகவும் இவ்விருதுகளைப் பெற்றுள்ளார்.

கடைசித் திரைப்படம்:
அதற்கு பின்னர் மராத்திய மொழிப்படங்களில் கவனம் செலுத்திய அவர், 2012 ஆம் ஆண்டு கடைசியாக "பாம்பே டாக்கிஸ்" என்ற படத்தில் திரையில் தோன்றினார்.

நிஜத்தில் “ஹீரோதான்”:
திரையில் தீய குணங்களுடன் தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பல்வேறு தொண்டுகளிலும், சமூக பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

நாளை இறுதிப்பயணம்:
அவருடைய இறுதிச் சடங்கானது, சொந்த ஊரான அகமத்நகரில் நாளை நடைபெறும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











