Amaran:அமரன் படம் பார்த்துவிட்டு யாருமே என்னிடம் பேசவில்லை.. வெற்றி விழாவில் மனம் திறந்த சாய் பல்லவி
சென்னை: அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், அவரது காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் அமரன். இப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனது. அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் சாய் பல்லவி பேசியது பலரது கவனத்தினை ஈர்த்தது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
படம் பார்த்த பலரும் படத்தின் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டினாலும் பெரும்பாலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. சினிமா விமர்சகர்களில் இருந்து படம் பார்த்த ஜென்ரல் ஆடியன்ஸ் வரை அனைவரும் சாய் பல்லவியின் நடிப்பினைப் பாராட்டினார்கள். சாய் பல்லவி ஸ்கிரிப்ட்டில் இருந்ததை திரையில் கொண்டுவர மிகவும் மெனக்கெட்டுள்ளார். அவர் வரக்கூடிய ஒவ்வொரு ஃப்ரேமிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தான் ஏற்றுக்கொண்ட இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என பலரும் பாராட்டினார்கள்.

ரீல் இந்து ரெபேக்கா வர்கீஸின் நடிப்பு மற்றும் உடல் மொழியைப் பார்த்த ரியல் இந்து ரெபேக்கா வர்கீஸ், ’என்னைப் பார்ப்பதைப் போலவே’ இருக்கின்றது எனக் கூறியதாக இயக்குநர் ராஜ்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். படம் வசூலில் இதுவரை சுமார் ரூபாய் 170 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால் வசூல் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. முதல் நாள் மட்டும் படம் ரூபாய் 42.3 கோடிகள் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.

சாய் பல்லவி: இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதைப் பார்த்த பலரும் கண் கலங்கினர். அமரன் படத்தினை தனது சொந்த வாழ்க்கையுடன் இணைத்து சிவகார்த்திகேயன் பேசியது பலரையும் கண் கலங்க வைத்தது. இந்நிலையில் இந்த விழாவில் சாய் பல்லவி பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

ஆத்ம திருப்தி: அதாவது, "ஒரு சில படங்கள் மட்டுமே மிகவும் சிறப்பானதாக அமையும், அப்படி அமைந்த படம்தான் அமரன். இந்தப் படத்தில் ஒவ்வொரு குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். சில படங்கள் செய்யும்போதுதான் வசூலைக் கடந்து நமக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். நாம் மக்களுக்கு கடத்த நினைத்ததை கடத்திவிட்டோமா? மக்கள் அதனை சரியாக உள்வாங்கிக் கொண்டார்களா என்பதில் மிகவும் கவனமாக இருப்போம். அப்படியான படம்தான் அமரன்.

கண்ணீர்: இந்தப் படத்தினை பார்த்துவிட்டு, எனது தோழி ஒருவர் எனக்கு மேசேஜ் செய்திருந்தார். அவர் இவ்வளவு நாள் மறைந்து போன எனது அப்பாவை நான் திட்டிக்கொண்டு இருந்தேன். ஆனால் அமரன் படத்தினை நான் எனது அம்மாவின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தபோதுதான், எனது அப்பாவின் மீது இருந்த கோபம் முற்றிலுமாக மாறியுள்ளது என அனுப்பினார். படம் பார்த்த பலரும் என்னிடம் பேசவில்லை, மாறாக அவர்கள் அனைவரும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதனர்" எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது



Click it and Unblock the Notifications











