இதெப்படி இருக்கு..? மெஹந்தி டிசைனராக மாறிய நம்ம 'ரவுடி பேபி'.. மகிழ்ச்சியில் குழந்தைகள்!
சென்னை: நடிகை சாய் பல்லவி ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க வந்த குழந்தைகளுக்கு மெஹந்தி போட்டுவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை சாய் பல்லவிக்கு தமிழை விட, தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வருகின்றன.
பிரபல ஹீரோக்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார், சாய் பல்லவி.

அடுத்த பிரபுதேவா
சாய் பல்லவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான, யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர். சிறந்த நடன கலைஞரான அவர், தெலுங்கு சேனல் ஒன்றில் தி அல்டிமேட் டான்ஸு என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று புகழ் பெற்றார்.

வரவேற்பு பெற்ற ஃபிடா
பின்னர், பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானர். இதில் இவர் நடனமும் மலர் டீச்சர் கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபலமானார். தெலுங்கில் அவர் நடித்த ஃபிடா படம் வரவேற்பைப் பெற்றது.

ஒச்சிந்தே பாடல்
இந்தப் படத்தில் 'ஒச்சிந்தே' என்ற பாடலில் அவரது நடனம் தெலுங்கு ரசிகர்களை தெறிக்கவிட்டது. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்து தனுஷூடன் 'மாரி 2' படத்தில் நடித்தார். இதை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார்.

தனுஷூடன் சாய்பல்லவி
யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் இதில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிரபுதேவாவின் நடன அமைப்பில், தனுஷூடன் சாய் பல்லவி ஆடிய இந்தப் பாடல் உலக அளவில் பிரபலமானது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி, சாதனைப் படைத்தது.

தெலுங்கு லவ்ஸ்டோரி
இப்போது சேகர் காமுலா இயக்கும் லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்து வருகிறார். ராணாவுடன் விராட பர்வம், அடுத்து ஷியாம் சிங்கா ராய் ஆகிய படங்களிலும் அவர் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு ஒன்றுக்காக நடிகை சாய் பல்லவி, உத்தரபிரதேசம் சென்றுள்ளார்.

வேடிக்கைப் பார்க்க
அங்குள்ள பிப்ரி என்ற கிராமத்தில், படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகை சாய் பல்லவி, ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க வந்த குழந்தைகளுக்கு, மாஸ்க் அணிந்தபடி அழகாக மெஹந்தி போட்டு விடுகிறார். மெஹந்தி டிசைனராக அவர் மாறியதை படப்பிடிப்பில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

மெஹந்தி குழந்தைகள்
அந்த வீடியோவையும் மெஹந்தி போட்டுக் கொண்ட சில குழந்தைகள் மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











