கோலிவுட் ஃபேவரைட் ஜோடி விவாகரத்து.. ஜிவி பிரகாஷை பிரிந்த சைந்தவியின் குடும்ப பின்னணி தெரியுமா?
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும், இசையமைப்பாளர், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி கால தோழியான சைந்தவியை பல வருடங்கள் காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் அனுசரித்து, புரிந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். இதன் காரணமாக கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்ற பெயரையும் இவர்கள் பெற்றார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேரும் விவாகரத்து செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில் சைந்தவி குறித்து இதில் பார்க்கலாம்.
சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்துகொள்வது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அதே அளவுதான் விவாகரத்தும். பல காலம் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் சில காலத்திலேயே பிரிவதும்; சில காலம் கூட தாங்கமாட்டார்கள் என்று கணிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதும் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி.

பள்ளி காதல்: ஜிவி பிரகாஷும், சைந்தவியும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்கும் இசை மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் அந்த இசை துறை அவர்களை காதல் என்ற புள்ளியில் இணைத்தது. இருவரும் உருகி உருகி காதலித்தார்கள். ஜிவி பிரகாஷும் இசையமைப்பாளராக வந்தார், சைந்தவியும் அந்நியன் படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். சினிமாவில் இருந்தாலும் தங்களது காதலை பிரியாமல் பார்த்துக்கொண்டார்கள் இருவரும். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார்.
சைந்தவியின் ஆரம்ப காலம்: ஜிவி பிரகாஷ் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால் சைந்தவி குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. சைந்தவியின் சொந்த ஊர் சென்னை. அவரது தந்தை பெயர் ஸ்ரீவத்சன். மருத்துவராக இருக்கிறார். தாய் பெயர் ஆனந்தி. இவர் பிரபல வங்கியில் முக்கிய பதவியில் இருந்தார் என்று கூறப்படுகிறது. விஜய் கார்த்திக், வினோத் கிருஷ்ணா என்ற இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். 1989ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 9ஆவது வயதிலிருந்தே பாடல்களை பாடிவருகிறார். கோயில்களில் நடக்கும் விழாக்கள், மேடை கச்சேரிகள் என அனைத்திலுமே தனது குரல் திறமையை சிறு வயதிலயே நிரூபித்தவர்.
பெற்றோரின் பங்கு: சைந்தவி பாரம்பரியமான இசை குடும்பத்திலிருந்து வரவில்லை என்றாலும் அவரது தந்தைக்கும் தாய்க்கும் இசை மீது ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக கலை நிகழ்ச்சிகள், பஜனைகளுக்கு, கச்சேரிகளுக்கு சைந்தவியை அழைத்து செல்வார்கள். அப்போதிருந்தே அவருக்கும் இசை மீது ஆர்வம் வந்தது. பிறகு அதனை முறைப்படுத்த டி.கே.பட்டம்மாள், சுப்புலெட்சுமி உள்ளிட்டோரிடம் வகுப்புக்கு சென்றார் சைந்தவி. பிறகு கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன் க்ளாசிக்கல் மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறையாக கற்று தேர்ந்தார்.
சினிமாவில் சைந்தவி: அந்நியன் படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' பாடலை பாடி அறிமுகமான அவர், தொடர்ந்து ஆதி படத்தில் இடம்பெற்ற 'இப்போ இல்லாட்டி எப்போ', அழகிய தமிழ் மகனில் இடம்பெற்ற 'கேளாமல் கையிலே', வரலாறு படத்தில் இடம்பெற்ற 'இன்னிசை அளபடையே', பையா படத்தில் இடம்பெற்ற 'அடடா மழைடா, 'சுறாவில் இடம்பெற்ற 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி, 'மதராசப்பட்டினத்தில் இடம்பெற்ற 'ஆருயிரே', தெய்வதிருமகள் படத்தில் இடம்பெற்ற 'விழிகளில் ஒரு வானவில்', அசுரனில் இடம்பெற்ற' எள்ளு வய பூக்கலையே 'என ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். பல பாடல்கள் இவர்தான் பாடியிருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
குடும்ப பின்னணி: சைந்தவியின் குடும்பம் பாரம்பரியமான குடும்பம் என்று சொல்லப்படுகிறது. அதாவது அவர்கள் இந்து கலாசாரத்தை ரொம்பவே மதிப்பவர்கள் என்றும்; சைந்தவியின் தாய் சனாதன தர்மத்தின் மீது உச்சக்கட்ட மதிப்பு வைத்திருப்பதாகவும் திரைத்துறையினர் மத்தியில் ஒரு பேச்சு ஓடுவது குறிப்பிடத்தக்கது.
பிரிவு: சுமூகமாக போய்க்கொண்டிருந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. இது திரைத்துறையினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்கு காரணம் ஜிவி பிரகாஷின் மாமியாரின் தலையீடு பிரகாஷ் - சைந்தவி விஷயத்தில் அதிகம் இருந்தது என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள்.
முக்கியமாக சைந்தவியின் தாய் இந்துத்துவா மனநிலையில்தான் இருப்பார். அவர் பாஜகவின் ஆதரவாளர்; அவர் கொடுத்த அழுத்தத்தின் பேரில்தான் அமித் ஷாவை ஜிவி பிரகாஷ் நேரில் சென்று சந்தித்தார் என்றும்; ஜிவி பிரகாஷ் நடிக்க வந்தபோதே அது சைந்தவிக்கு பிடிக்கவில்லை. இசையை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமே என்று சைந்தவி கண்டிஷன் போட்டார்; ஆனால் அதனை ஜிவி பிரகாஷ் கேட்கவில்லை; அதுமட்டுமின்றி படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது சைந்தவிக்கு பிடிக்கவில்லை அதனால்தான் விவாகரத்து என்று இன்னொரு தரப்பினரும் சொல்கிறார்கள்.
எது எப்படியோ அவர்கள் இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். ஜிவி பிரகாஷ் கூறியது போல் அவர்களது ப்ரைவேசிக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











