AR Rahman: ஏ.ஆர். ரஹ்மான் எப்படிப்பட்டவர் தெரியுமா? விவாகரத்துக்குப் பின் மனைவி சாய்ரா பானு ஓபன்!
மும்பை: கடந்த சில நாட்களாகவே மிகவும் பரபரப்பாக பேசப்படும் திரைத்துறை சமாச்சாரங்களில் ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்தும் ஒன்று. 29 ஆண்டு கால திருமண உறவில் இருந்து தானும் தனது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் தங்களது பிரிவினை அறிவித்த மறுநாளே ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் இருக்கும் பேஸ் கிட்டாரிஸ்ட் மோனிகா தே-வும் தனது கணவரைப் பிரிவதாக அறிவித்தார். உடனே பலரும் பலவிதமாக அவதூறு கருத்துகளையும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பரப்பினர். இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிந்த சாய்ரா பானு ஏ.ஆர். ரஹ்மான் குறித்து அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் எனக் கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி நள்ளிரவு வாக்கில் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிவதாக அறிவித்தார். 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள், கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண உறவில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இவர்களுக்கு ரஹீமா ரஹ்மான், கதிஜா ரஹ்மான், அமீன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது பெற்றோர்களின் விவாகரத்து விஷயத்தை மிகவும் பக்குவமாக கையாளும் அளவிற்கு மூவரும் தனது பெற்றோர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

குறிப்பாக ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் என இருவரும், ஏ.ஆர். ரஹ்மான் குறித்த சர்ச்சையான செய்திகள், சமூக வலைதளப் பதிவுகள், யூடியூப் வீடியோக்கள் என அனைத்திற்கும் எதிராக குரல் கொடுத்துக் கொண்டும், கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டும் இருந்தனர். இப்படியான நிலையில் நேற்று, அதாவது நவம்பர் 23ஆம் தேதி, ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து, அனைத்து ஊடகத்தினர், சமூக வலைதளவாசிகள், யூடியூப் சேனல்கள் என அனைத்திற்கும் வக்கீல் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அதில், தனது விவாகரத்து தொடர்பாக அவதூறு கருத்துகளைப் பரப்பும் வகையில் செய்தி, வீடியோ அல்லது சமூக வலைதளப் பதிவு என எதைப் பதிவிட்டிருந்தாலும், அதனை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சாய்ரா பானு: இந்நிலையில் இன்று, ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிந்த சாய்ரா பானு, ஏ.ஆர். ரஹ்மான் மீது அவதூறு கருத்துகளைப் பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, “ நான் தற்போது மும்பையில் உள்ளேன். எனக்கும் ரஹ்மானுக்கும் கடந்த பல மாதங்களாகவே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இருவரும் திருமண உறவில் இருந்து வெளியேறிவிடலாம் என முடிவு செய்து, வெளியேறினோம்.
வேண்டாம்: இந்நிலையில், அவர் குறித்து பலரும் அவதூறு கருத்துக்கள் பரப்பும் வகையில் செய்திகள், வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். தயவு செய்து அவ்வாறு செய்ய வேண்டாம். ஏ. ஆர். ரஹ்மான் மிகவும் அற்புதமான மனிதர். இந்த உலகத்திலேயே தலை சிறந்த ஆண் மகன் அவர். எக்காரணம் கொண்டும் அவர்மீது அவதூறு கருத்துகளைப் பரப்ப வேண்டாம். நான் எனது உடல்நிலை தொடர்பாக சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன். விவாகரத்து விவகாரத்திற்குப் பிறகு பலரும், நான் எங்கே என்ற கேள்வியைக் கேட்டு வருகின்றனர். சிகிச்சைக்குப் பின்னர் நான் சென்னைக்கு வந்துவிடுவேன்.
அன்பு: நான் எந்த அளவுக்கு அவர் மீது அன்பு செலுத்தினேன் என்பது அவருக்குத் தெரியும், அவர் என்மீது எந்த அளவுக்கு அன்பு செலுத்தினார் என்பது எனக்குத் தெரியும். இது தெரியாதவர்கள் அவர் மீது அவதூறு கருத்துக்களைப் பரப்புவது என்பது அர்த்தமற்றது. தயவு செய்து ஏ.ஆர். ரஹ்மான் மீது அவதூறு கருத்துக்களைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ளவும்” எனக் கூறியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











