December Race: 2வது முறையாக ஷாருக்கானுடன் மோதும் கேஜிஎப் இயக்குநர்.. போட்டியில் தனுஷும் இருக்காரே!
சென்னை: நடிகர் பிரபாஸ் -கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சலார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திலேயே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

தற்போது இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதியில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் ரேஸில் பங்கேற்கும் பவர்ஃபுல் படங்கள்: நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார். கேஜிஎப் படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ள இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் சலார். ஹோம்பாலே நிறுவனத்தின் கூட்டணியில் மீண்டும் இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளார் பிரஷாந்த் நீல். அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது சலார் படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள சலார் படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் படம் டிசம்பர் 22ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் திருப்தி இல்லாததால் ரீ-சூட் செய்ய பிரஷாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகளை மேலும் பிரம்மாண்டமாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தப் படம் டிசம்பரில் வெளியாவது குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் ஷாருக்கானின் டன்கி படமும் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமசையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்த ஆண்டில் வெளியாகும் ஷாருக்கானின் மூன்றாவது படம் இது. முன்னதாக அவரது நடிப்பில் வெளியாகியுள்ள பதான் மற்றும் ஜவான் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. இந்நிலையில் ராஜ்குமதார் ஹிரானி இயக்கத்தில் டன்கி படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவுள்ளது. படத்தில் ஷாருக்கிற்கு டாப்சி ஜோடியாகியுள்ளார்.
இந்நிலையில் பிரபாஸ் -பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார் மற்றும் ஷாருக்கானின் டன்கி படங்கள் டிசம்பரில் மோதவுள்ளன. இந்தப் படங்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ள நிலையில் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக பிரஷாந்த் நீல் மோதவுள்ளார். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டில் ஷாருக்கானின் ஜீரோ படத்துடன் கேஜிஎப் படம் மோதியதில் கேஜிஎப் படத்திற்கே வெற்றி கிடைத்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தன்னுடைய சலார் படத்துடன் ஷாருக்கானின் டன்கி படத்துடன் மோதவுள்ளார். முந்தைய போட்டியில் பிரஷாந்த் நீல் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக நடக்கவுள்ள இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே டிசம்பர் 15ம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர் படமும் போட்டியில் உள்ளது.
மிகுந்த பொருட்செலவுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பீரியட் படமாக சுதந்திர போராட்ட காலத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் வித்தியாசமான கெட்டப்புடன் காணப்படும் தனுஷின் லுக் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறித்து இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications