Salaar: சலார் படப்பிடிப்பில் வெறித்தனமாக மோதிக் கொண்ட பிரபாஸ் - பிருத்விராஜ்.. தீயாகப் பரவும் வீடியோ
சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் 22ம் தேதி ரிலீஸானது. பான் இந்தியா மூவியாக வெளியான சலார், அனைத்து மொழிகளையும் சேர்த்து மொத்தம் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சலார் படப்பிடிப்பில் பிரபாஸ், பிருத்விராஜ் மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சலார் படப்பிடிப்பில் வெறித்தனம்
பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படம் கடந்த வாரம் 22ம் தேதி ரிலீஸானது. முன்னதாக இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்ட படக்குழு தற்போது சலார் படத்தை ரிலீஸ் செய்துள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக உருவாகி வந்த சலாருக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அதனால் சலார் வெளியான முதல் நாளிலேயே படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்தது. பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவின. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து பாக்ஸ் ஆபிஸில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது சலார். முதல் நாளில் மட்டும் 178 கோடி ரூபாய் வசூலித்த சலார், இரண்டு நாட்களில் மொத்தம் 295 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தது.
அதேவேகத்தில் மூன்றாவது நாளில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இந்தாண்டில் அதிவேகமாக 400 கோடி வசூலை கடந்த படமாக சலார் சாதனை படைத்துள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மாஸ் காட்டி வருகின்றனர். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேஜிஎஃப் ஸ்டைலில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியிருந்தது சலார்.
பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியிருந்தாலும் சலார் படத்துக்கு ஏராளமான நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்தன. பிரசாந்த் நீல் தொடர்ந்து ஒரேமாதிரியான மேக்கிங் ஸ்டைலில் தான் படங்கள் இயக்குகிறார். கதை, திரைக்கதை, ஆக்ஷன் சீன்ஸ் என எதுவுமே வித்தியாசமாக இல்லை. முக்கியமாக கேஜிஎஃப் படம் அளவிற்கு சலார் படம் கிடையாது என விமர்சித்திருந்தனர். இந்நிலையில், சலார் படப்பிடிப்பில் பிரபாஸும் பிருத்விராஜ்ஜும் மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது சலார் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிரபாஸும் பிருத்விராஜும் ரத்தம் தெறிக்க தெறிக்க மோதிக்கொள்வது மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமில்லாமல் ஸ்டுடியோவில் எப்படி செட் போடப்பட்டது, பிரசாந்த் நீல் காட்சிகளை விளக்குவது, படத்தின் பின்னணி இசை ரெக்கார்டிங் செய்வது என அனைத்துமே இந்த மேக்கிங் வீடியோவில் உள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் மேக்கிங் வீடியோவே இப்படி பிரம்மாண்டமாக இருப்பதால் தான், படமும் சும்மா தாறுமாறாக தெறிக்கவிட்டுள்ளதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், படப்பிடிப்பில் உள்ளது எல்லாம் செட்டிங் என சொன்னால் யாருமே நம்ப முடியாதபடி இருக்கின்றன. ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன. இதுவரை படம் பார்க்காதவர்கள் தற்போது சலார் மேக்கிங் வீடியோ பார்த்ததும் கண்டிப்பாக டிக்கெட் புக் செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











