Salaar: பிரபாஸின் சலார் படத்துக்கு வந்த திடீர் சிக்கல்... ரிலீஸ் தேதியை ஒரேடியாக மாற்றிய படக்குழு!
சென்னை: பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சலார்.
கேஜிஎஃப் படத்துக்குப் பின்னர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலாருக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள சலார், செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகவிருந்தது.
ஆனால், திடீரென சலார் ரிலீஸ் தேதியில் மாற்றம் என அறிவித்த படக்குழு, தற்போது ஒரேடியாக ஒத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சலார் ரிலீஸ் தேதியில் புதிய சிக்கல்: பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர், பான் இந்தியா ஹீரோவாக பிரபலமாகிவிட்டார் பிரபாஸ். ஆனாலும் பாகுபலியைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. சாகோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்த மூன்று படங்களுமே மோசமான தோல்வியைத் தழுவின. இதனால் சலார் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் பிரபாஸ்.
கேஜிஎஃப் படங்கள் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல், சலார் படத்தை இயக்கியுள்ளார். கேஜிஎஃப் கூட்டணியில் இல்லாமல் பிரசாந்த் நீல் இயக்கும் முதல் படம் சலார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹீரோ யாஷுக்குப் பதிலாக பிரபாஸ் இதில் நடித்துள்ளார். சலார் படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக உள்ளது.
இந்தப் படத்தை இம்மாதம் (செப்டம்பர்) 28ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இதனால், சலார் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேநேரம் ட்ரெய்லருக்குப் பதிலாக, சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக செய்தி வெளியானது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
VFX உள்ளிட்ட சில கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், சலார் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. மேலும், சலார் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், எதிர்பாராத சூழலால் சலார் சொன்னபடி செப்டம்பர் 28ம் தேதி வெளியாகாது என தெரிவித்திருந்தது. அதேநேரம் சலார் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகலாம் என சொல்லப்பட்டது. தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
சலார் கிராபிக்ஸ் வேலைகள் இப்போதைக்கு முடியாது என்பதால், ரிலீஸ் தேதியை ஒரேடியாக ஒத்தி வைத்துள்ளதாம் படக்குழு. அதன்படி சலார் 2024 தொடக்கத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி குழப்பம், ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











