பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக போன இடத்தில் இப்படியா நடக்கணும்.. பாம்பு கடியில் சிக்கிய சல்மான் கான்
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக தனது பண்ணை வீட்டுக்கு சென்ற சல்மான் கானை இன்று காலை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

நாளை பிறந்தநாள்
பாலிவுட்டின் முன்னணி நடிகர் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் சல்மான் கானின் 56வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பன்வெல் எனும் தங்கையின் பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார் நடிகர் சல்மான் கான். நாளை அங்கே பார்ட்டிக்கெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இப்படியொரு சோகம் ஏற்பட்டுள்ளது.

பாம்பு கடி
தோட்டக் கலை, விவசாயம் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் சல்மான் கான். பண்ணை வீட்டுக்கு சென்ற நிலையில், இன்று காலை தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது அவரை ஒரு பாம்பு திடீரென கடித்து விட்டது. உடனடியாக நடிகர் சல்மான் கானை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சல்மான் கானுக்கு சிகிச்சை
கமோதியில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். பரிசோதனையில், அதிக விஷம் இல்லாத பாம்பு தீண்டியதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஷ முறிவு மருந்து நடிகர் சல்மான் கானுக்கு கொடுக்கப்பட்டு இன்று காலை 9 மணி அளவில் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

லாக்டவுனில்
கடந்த ஆண்டு லாக்டவுனில் நடிகர் சல்மான் கான் இதே பன்வெல் பண்ணை வீட்டில் தான் தங்கி இருந்தார். நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உடன் பண்ணை வீட்டிலேயே தனியாக ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கி இருந்தார் சல்மான் கான். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மீண்டும் பண்ணை வீட்டுக்கு வந்த இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பதறிப்போன ரசிகர்கள்
இந்தியளவில் நடிகர் சல்மான் கானுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சல்மான் கானை பாம்பு தீண்டிய செய்தி காட்டுத் தீயாக பரவிய நிலையில், அவர் சீக்கிரமே குணமடைய வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் பதறிப் போய் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், நடிகர் சல்மான் கான் நலமுடன் உள்ளார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

செம பிசி
ஒரு பக்கம் பிக் பாஸ் இந்தி சீசன் 15ஐ நடத்தி வரும் நடிகர் சல்மான் கான் டைகர் 3 படத்தில் கத்ரீனா கைஃப் உடன் நடித்து வருகிறார். மேலும், நடிகை பூஜா ஹெக்டேவுடன் கபி ஈது கபி தீபாவளி எனும் படத்தில் நடிக்க உள்ளார். ஷாருக் கானின் பதான் மற்றும் அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளார்.


Click it and Unblock the Notifications











