எனது வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர்.. இசையமைப்பாளர் ராம்லக்ஷ்மன் மறைவால் மனமுடைந்த சல்மான் கான்
மும்பை: பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராம்லக்ஷ்மன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.
இசையமைப்பாளர் ராம்லக்ஷ்மன் மறைவு செய்தியை அறிந்த நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பிரபலங்கள் மற்றும் இசை ரசிகர்கள் என பலரும் ராம்லக்ஷ்மன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் இசையமைப்பாளர்
1942ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்தவர் லக்ஷ்மன். இவரது இயற்பெயர் விஜய் பாட்டீல். ஆனால், சினிமா உலகத்தில் இரட்டை இசையமைப்பாளர்களாக ராம் மற்றும் லக்ஷ்மன் ஆக கலக்கினார். இவரது நண்பர் ராம்(சுரேந்திரா) 1976ம் ஆண்டு மறைந்த நிலையில், தொடர்ந்து ராம்லக்ஷ்மன் எனும் பெயரிலேயே இவர் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

சல்மான் கான் படங்களில்
1975ம் ஆண்டு வெளியான பாண்டு அவல்தார் எனும் மராத்தி படத்திற்கு இசையமைத்து திரைத்துறையில் அறிமுகமானார். இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் வெளியான சுமார் 75 படங்களுக்கு இசையமைத்துள்ளார் ராம்லக்ஷ்மன். மேலும், சல்மான் கானின் மெயின் பியார் கியா, பதார் கே புல், ஹம் சாத் சாத் ஹைன், ஹம் அப்கே ஹைன் கவுன் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

மாரடைப்பால் மரணம்
நாடு முழுவதும் தினமும் சினிமா பிரபலங்களின் மறைவு செய்திகள் வெளியாகி திரையுலகை ஒட்டுமொத்தமாக துயரக் கடலில் ஆழ்த்தி வருகிறது. தெலுங்கு பட தயாரிப்பாளர் பி.ஏ. ராஜு மாரடைப்பால் இன்று மறைந்ததை போலவே இசையமைப்பாளர் ராம்லக்ஷ்மனும் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

சல்மான் கான் உருக்கம்
தனது வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் ராம்லக்ஷ்மன் என நடிகர் சல்மான் கான் உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் இந்த துயரில் இருந்து மீண்டு வரவும் பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











